திருவதிகை வீரட்டானம்பாடல் எண் : 1கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன் ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும் தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. பொழிப்புரை :கெடில ஆற்றின் வடகரையில் விளங்கும் திருவதிகை என்னும் வீரட்டானத் திருப்பதியில் உகந்தெழுந்தருளியிருக்கும் தலைவனே! யான் இப்பிறப்பில் என் அறிவு அறியப் பல கொடுஞ் செயல்களைச் செய்தேனாக எனக்குத் தோன்றவில்லை. அவ்வாறாகச் சூலைநோய், யாருக்கும் நோய்முதல் புலப்படாத வகையில் என் வயிற்றினுள் குடலோடு ஏனைய உள் உறுப்புக்களைக் கட்டிச் செயற்படாமல் மடக்குதலால் அடியேன் அவ்வலியைப் பொறுக்க இயலாதேனாக உள்ளேன். கூற்றுவனைப் போல அந்நோய் அடியேனைத் துன்புறுத்தும் செயலை நீக்கும் ஆற்றலுடையீர். அந்நோயை விலக்கினால் எப்பொழுதும் காளை மீது ஊரும் உம் அடிக்கண் நீங்காமல் மனத்தால் துணிவும் தலையால் தணிவும் மொழியால் பணிவும் தோன்ற வணங்குவேன். ஏற்றாய் அடிக்கு + ஏ. ஏ - தேற்றம். குறிப்புரை :திருக்கெடிலம் என்னும் ஆற்றிற்கு வடபால் விளங்கும் திருவதிகையில் உள்ள திருவீரட்டானம் எனப் பெயரிய மாநகராகிய திருக்கோயிலுள் எழுந்தருளிய சிவபெருமானே, அடியேனுக்கு மருளும் பிணி மாயை ஒரு கூற்று ஆயினவாறு வந்து வருத்தும் சூலை நோயை விலக்கமாட்டீர். (இந்நோயை அடைதற்கு அடியாகக்) கொடுமை பல செய்தன (உளவோ எனின், அவற்றை) நான் அறியேன். விடையானே. இரவும் பகலும் எப்பொழுதும் பிரியாமல் (நின்) அடி (மலர்)க்கே வணங்குவன். இந்நோய் என் வயிற்றின் உள்ளே அடியில் பற்றித் தன்னைத் தோற்றாமல் குடரொடு துடக்குண்டு என்னை முடக்கியிடலால், அடியேன் ஆற்றாமல் வருந்துகின்றேன். இவ்வருத்தம் அகற்றி அடியேனை ஆட்கொண்டருள்வாய்./n திருவதிகை மாநகர்க் கடவுளை மருணீக்கியார் (திருநாவுக்கரசு சுவாமிகள்) முதன் முதலில் நோக்கியபொழுதில் தம்மை அறியாதே திருவாயினின்றும் போந்த மொழியாவது, தம் உள்ளத்திற் பொருளாக இருந்த துன்பத்தை நீக்கிக் கொள்ளல் வேண்டும் என்பது. அஃது அல்லாமல் வேறொன்றாயிருத்தல் பொருந்தாது. அதனால் தொடக்கத்திலே `கூற்று ஆயினவாறு விலக்ககிலீர்` என்று வெளியாயிற்று./n அது கேட்ட முழுமுதற் பொருள், `இக்கூற்று ஆகி வந்த நோயினை அடைந்து வருந்துமாறு பல கொடுமைகளைச் செய்தனை. அக்கொடுமைகளை அடியாகக் கொண்டே இவ்வருத்தம் உண்டாயிற்று` என்று குறித்தது./n அதுகேட்ட சுவாமிகள், `அவற்றை நான் அறியச் செய்திலேன். என்னை அறியாமல் செய்த கொடுமைகள் பல இருக்கலாம். இருப்பினும் நான் அக்கொடுமைக்கோ அவற்றின் பயனுக்கோ கொள்கலம் ஆகும் பெற்றியேன் அல்லேன். இரவிலும் பகலிலும் எப்பொழுதும் பிரியாமல் (இடை விடாமல்) விடையேறி திருவடிக்கே வணங்கும் பணிசெய்து கிடப்பேன். திருவடிக்கு அடிமை பூண்ட என்னையும் அவ்வினை வருத்துதல் முறையோ? ஏற்றாய்க்கு இஃது ஏலாது (அறத்தின் வடிவமே ஊர்தியாம் ஏறு)` என்றார்./n `அச்சோ! கெடிலத்தின் வடபால் விளங்கும் திருவதிகையில் வீரட்டானத்தில் எழுந்தருளிய அம்மானே! சூலை நோய் தன்னைப் புலப்படுத்தாமல் என் வயிற்றின் உள்ளே அடியிலே குடலொடு துடக்குற்று, முடக்கியிடுதலால் உண்டாக்கும் வருத்தத்தினைப் பொறுக்கும் வலியில்லேன். அறிந்து செய்த வினையின் பயனாயினும் அறியாது செய்த வினையின் பயனாயினும், இத் துயரம் தீர்த்து அடியேனைக் காத்தருள்வாய்` என்றார் சுவாமிகள்./n விளக்கம்/n/n வேற்றுச் (சமண்) சமயத்தில் இருந்த காலம் முழுதும் பரம சிவனைத் தொழாதாராகியும், இரவும் பகலும் எப்பொழுதும் பிரியாது வணங்குவன் என்றது எவ்வாறு பொருந்தும் எனின், கூறுதும்./n இது திருநாவுக்கரசு சுவாமிகளுக்கு மட்டும் அன்று. புது நெறியிற் புக்க யாவர்க்கும் தொன்னெறியிற் பற்று நீங்காது; புது நெறியில் ஒரு துணிவுண்டாகாது; பழநெறியிலிருந்தால் இப்பிறவியிலேயே வீடு பெறலாம் என்ற எண்ணம் அகலாது. இஃது உள்ளத்தியற்கை. சைவ சித்தாந்தச் செந்நெறிப்படியும் பரசிவனை மறவாமை வாய்மையாகின்றது. எவ்வாறு?/n `யாதோர் தேவர் எனப்படுவார்க் கெல்லாம்/n மாதேவன் அல்லால் தேவர்மற்று இல்லையே`/n என்று (தி.5 ப.100 பா.9) அவர் திருவாய் மலர்ந்தருளியதாலும் `யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வம் ஆகி ஆங்கே மாதொரு பாகனார் தாம் வருவர்` என்று அருணந்தி தேவநாயனார் அருளிய திருவாக்காலும், இராப் பகல் எல்லாம் சிவபிரானை மறவாத சீர்த்தி சுவாமிளுக்கு உண்டு என்பது உறுதியாயிற்று./n `வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்/n தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச்/n சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே/n வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.`/n (தி.5 ப.90 பா.7)/n என்று அருளினார் பின்னர். சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் என்று அருளினார் முன்னர். இது முரணுவதே? இதுவும் பலர் வினாவுவதே. `பூக் கைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார் ... கழிவரே`,`நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்கும் ... புண்ணியன், பொக்க மிக்கவர் பூவும் நீரும் கண்டு நக்கு நிற்பன் அவர் தம்மை நாணியே` என்றவற்றையும் `பல் மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன்` என்பது முதலியவற்றையும் ஒருங்குவைத்து நோக்குவார்க்குச் செவ்வன் இறை (நேர்விடை) தோன்றும்./n திருவதிகை வீரட்டானத் திறைவர் வினா:- ஏன் இங்கு வந்தாய்? என்பால் தீர்தற்கு உன்பால் உள்ள குறை என்ன?/n மருணீக்கியார்:- அதிகைக் கெடில வீரட்டானத் திறைவரே, இச்சூலை நோய் எனக்குக் கூற்று ஆன வகையை விலக்கமாட்டீர்?/n இறைவர்:- `அவர் அவர் வினைவழி அவர் அவர் அநுபவம்` உன்னை இச்சூலை நோய் பற்றி வருத்த, நீ செய்த வினைகள்தாம் காரணம். வினைப்பயனை வினை செய்தவர் அநுபவித்துத்தான் ஆதல் வேண்டும். பயன் அநுபவிக்காமல் இருக்கும் நெறியில் இறைபணி நின்று வினைசெய்திருப்பாயாயின், உன்னை அவ்வினை வருத்தாது. நீ செய்த பல கொடுமைகள் யாவை? அறிவையோ?/n மருணீக்கியார்:- கொடுஞ்செயல்களாகச் செய்தன பலவற்றை அறியேன் நான். (அபுத்தி பூர்வ பாவ கன்மம் என்றவாறு)/n இறைவர்:- அபுத்தி பூர்வ புண்ணிய கன்மங்களைச் செய்துவரின், அத்தகைய பாவ கன்மம் விலகும். அது செய்து வருகின்றாயோ?/n மருணீக்கியார்:- ஏற்றாய்! (எருதின்மேல் ஏறிவரும்) பெருமானே! பசுபதீ! இரவிலும் பகலிலும் எப்பொழுதும் பிரியாமல் அடிக்கே வணங்குவன். வணங்கி வந்தும் அபுத்தி பூர்வ பாவகன்மம் விலகி யொழியாமல் வருத்துகின்றதே!./n இறைவர்:- விலகும் வரையில் வலியைப் பொறுத்துக் கொண்டு தான் இருத்தல் வேண்டும். எவ்வாறு எங்கே உன்னை அது வருத்துகின்றது?/n மருணீக்கியார்:- எனக்கும் தோற்றாமல் என் வயிற்றின் உள்ளடியில் குடலொடு துடக்குற்று என்னை முடக்கி யிடுகின்றது. அதனால் அடியேன் வலியைப் பொறுக்கமாட்டாமல் வருந்துகின்றேன்./n இறைவர்:- நீ வருந்தினால், நான் யாது செய்வது?/n மருணீக்கியார்:- கெடில நதிக்கரையில் திருவதிகையின் மாநகரில் (பெருங்கோயிலில்) எழுந்தருளிய அம்மானே! ஆண்டீர் நீயிர். அடியேன் யான். அதனால் அடியேனைக் காத்தல் ஆண்டீர்க்குக் கடனாகும்./n எச்சம்/n/n கூற்று என்பது உடம்பும் உயிரும் வெவ்வேறு கூறாகச் செய்யுங்காரணம் பற்றிய பெயர். சூலை நோய் உடம்பினின்று உயிரை நீக்கும் அளவு வருத்துவதால் கூற்றெனப்பட்டது. சூலை கூற்று அன்று. கூற்றாயிற்று. அதனால் `ஆயினவாறு` என்றார்./n கயிலையை எடுத்தபோது நெருக்குண்ட இராவணன் அத்துன்பத்தின் நீங்கத் தக்க வழியைக் (கடவுள் இன்னிசையில் சாமகானத்தில் விருப்பன் என்று சொல்லிக்) காட்டிய பழம் பிறவி நிகழ்ச்சியே இச் சூலைக்கு ஏது என்பதை உணர்த்தக் `கூற்று ஆயினவாறு` எனறருளினார் என்பது சிலர் கருத்து. கோவை சிவக்கவிமணி சைவத் திரு. சி. கே.சுப்பிரமணிய முதலியார் பி.ஏ., அவர்களும் அதைக் குறித்திருக்கின்றார்கள். கோதாவரிக் கரையில் சமணமே உயர்ந்தது என்று சொற்போர் புரிந்த வரலாறும் அவர்களால் குறிக்கப்பட்டுளது. (தி.12. அப்பர் புராணம் 70 சி.கே.எஸ் உரை. பதிகக் குறிப்பு நோக்குக.)/n கொடுமை பல செய்தன - கொடுஞ் செயல்களாகச் செய்தன பல. நான் அறியேன் - அறிந்து செய்தேன் அல்லேன். அறியாமற் செய்தனவாயிருக்கும். அபுத்தி பூர்வ பாவ கன்மம் என்றபடி./n கொடுமை - கொடுஞ்செயல். பண்பாகு பெயர். செய்தன - வினையாலணையும் பெயர்./n ஏற்றாய் - (ஏறு- விடை) விடையை யுடையாய்; விளியேற்ற வினைப்பெயராயும் முன்னிலை வினைப்பெயராயும் கொண்டுரைத்தாருமுளர். இராப் பகல் இடைவிடாது செய்யும் வணக்கமே பிறவிப் பிணிக்கு மருந்து. `மனத் தகத்தோர் பாடல் ஆடல் பேணி இராப் பகலும் நினைத்தெழுவார் இடர் களைவாய் நெடுங்களம் மேயவனே!` தி.1 ப.52 பா.2); `இரவொடு பகலதாம் எம்மான் உன்னைப் பரவுதல் ஒழிகிலேன் வழியடியேன்` (தி.3 ப.3 பா.8) `எல்லியும் பகலும் உள்ளே ஏகாந்தம் ஆக; ஏத்தும்` (தி.4 ப.41 பா.3) என வருதல் உணர்க./n அடிக்கே இரவும் பகலும் எப்பொழுதும் பிரியாது வணங்குவன். அடிக்கே - என்பதில் உள்ளவாறு, அப்பர் அருளிய மூன்று திருமுறையுள்ளும் பற்பல இடத்திற் காணலாம். `சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே` என்பது பல திருப்பாக்களின் முடிவாயுள்ளது. `விசயமங்கை ஆண்டவன் அடியே காண்டலே கருத்தாகியிருப்பன்` `நல்லுருவிற் சிவனடியே அடைவேன்` `சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றேன்` `திருவாரூர் மணவாளா நின்னடியே மறவேன்` உன்னை அல்லால் யாதும் நினைவிலேன்` என்று அண்ணாமலையாகிய தீச்சான்றாகச் சொல்லியருளினார். `எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் கண்ணிலேன் மற்று ஓர் களைகண் இல்லேன் கழலடியே கை தொழுது காணின் அல்லால் ... உணர மாட்டேன் புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே` என்பவற்றால் திருவடிக்கேயன்றி மற்று எதற்கும் தம் வணக்கத்தை உரித்தாக்காத உறுதியுடையவர் வாகீசப் பெருந்தகையார். நான்காவது திருமுறையின் இம்முதல் திருப்பாட்டில் `அடிக்கே` என்றருளினார். தி.6இன் ஈற்றுப் பதிகத்தின் ஈற்றடியில் எல்லாம் `அடிக்கே` என்பது அமைந்தவாறு அறிக. `ஒற்றை யேறுடையான் அடியே அலால் பற்று ஒன்று இல்லிகள் மேற்படை போகலே` என்பதில் `சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்` உடையவர்க்கு இறப்பு இன்மை உணர்த்தியவாறும் உணர்க. இதனை உணர்வார் அனைவரும் தம் தம் முப்பொறிகளையும் சிவபிரான் திருவடிக்கே உரியனவாம் வகையிற் செலுத்தும் அருள் வாழ்வு நடத்துவதே வையகத்துள் வாழ்ந்தும் அருள் வானத்தில் வாழ்ந்து பெறும் பேரின்பத்தை அடைவிக்கும்./n `ஏயிலானை என் இச்சை அகம்படிக் கோயிலானை` (தி.5 ப.91 பா.1) ஈற்றுத் திருக்குறுந்தொகையுள் 4,8,9 ஆம் திருப் பாடல்களை நோக்கின், திருநாவுக்கரசர் திருவுள்ளக் கிடக்கை இனிது புலனாகும். சிவபத்தர்க்குளதாகும் பேரின்பம் விண்டு பத்தர்க்கு உண்டாகாது என்று அறுதியிட்டுக் கூறியதுணர்க./n அகம்படியே:- அகம்புxபுறம்பு. அகம், புறம் என்பன வற்றின் ஈற்றில், புகாரம் இயைந்து வழங்குதல் இன்றும் அறியலாம். புகாரத்தோடு சேர்ந்தவை அகன், புறன் என்றலும் ஆம். அகம்பு + அடிமை + தொழில் = அகம்படிமைத்தொழில். திருக்கோயிலின் உட்டுறை வினைஞர் அகம்படியர் ஆவர். திருநாளைப் போவாரை `நாளைப் போவாராம் செயலுடைப் புறத் திருத்தொண்டர் திறத்தினை மொழிவாம்` `திருவாயிற்புறம் நின்று ஆடுதலும் பாடுதலும் ஆய் நிகழ்வார்.` `தம் பெருமான் இடம் கொண்ட கோயில் புறம் வலம் கொண்டு பணிந்தெழுந்து` `மதிற்புறத்தின் ஆராத பெருங்காதல் ... வளர்ந்தோங்க உள்ளுருகிக் கைதொழுதே ... திருவெல்லை வலங்கொண்டு செல்கின்றார்`. `மதிற்புறத்துப் பிறை யுரிஞ்சுந் திருவாயில் முன்னாகப் ... நெருப்பமைத்தகுழி` என்பவற்றால், புறம்படிமை விளங்கும். `நடமாடும் கழல் உன்னி அழல் புக்கார் ... எரியின் கண் ... மாய ... உரு ஒழித்துப் புண்ணிய மாமுனிவடிவாய் ... வெண்ணூல் விளங்க வேணிமுடி கொண்டெழுந்தார்`, `வானவர்கள் மலர்மாரிகள் பொழிந்தார்`. `தில்லைவாழந்தணர்கள் கைதொழுதார்`. `தொண்டர்களும் பணிந்து மனம் களி பயின்றார்`. திருநாளைப் போவாராம் மறைமுனிவர் தில்லை வாழந்தணரும் உடன் செல்லச் சென்று ... கோபுரத்தைத் தொழுது உள்புகுந்தார் ... `உலகு உய்ய நடமாடும் எல்லையினைத் தலைப்பட்டார்` என்பவற்றால் அகம்படிமை விளங்கும். ஒருவர் திறத்திலேயே அகம்படிமை புறம்படிமை இரண்டும் விளங்குதலைத் திருத்தொண்டர் புராண(தி.12)த்தில் காண்க. பாடல் எண் : 2நெஞ்சம்உமக் கேயிட மாகவைத்தேன் நினையாதொரு போதும் இருந்தறியேன் வஞ்சம்இது வொப்பது கண்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட நஞ்சாகிவந் தென்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர் அஞ்சேலும்என் னீர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. பொழிப்புரை :அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே! என் நெஞ்சத்தை உம்மிடத்திலேயே உறைவிடம் பெறுமாறு பண் படுத்திவிட்டேன். இனி ஒரு பொழுதும் உம்மை நினையாமல் இருக்க மாட்டேன். இச்சூலைநோயைப் போலக் காரணத்தைப் புலப்படுத்தாமல் காரியத்தில் செயற்படும் கொடுநோயை அடியேன் இதுகாறும் அனுபவித்தறியேன். வயிற்றினோடு ஏனைய உள்ளுறுப்புக்களைக் கட்டி அவை செயற்படாமல் மடக்கியிடுவதற்கு விடம் போல வந்து என்னைத் துன்புறுத்தும் நோயை விரட்டியோ செயற்பாடு இல்லாமல் மறைத்தோ என்னைக் காப்பீராக. அஞ்சேல் என்று எனக்கு அருளுவீராக. குறிப்புரை :திருக்கெடில நதிக்கரையிலே திருவதிகையிலே திருவீரட்டானத்திலே எழுந்தருளியிருக்கும் ஆண்டவரே. அடியேனது நெஞ்சம் தேவரீர்க்கே உறைவிடம் ஆகப் பண்படுத்தி வைத்துள்ளேன். ஒரு பொழுதிலும் உம்மை நினையாமல் இருந்தறியேன். இச் சூலை நோய் போல்வதொரு கொடுநோயை அடியேன் அநுபவித்தறியேன். அஃது அடியேனது வயிற்றினொடு துடக்குண்டு முடக்கியிடும்படி நஞ்சாய் வந்து அடியேனை வருத்துகின்றது. அச்சூலை நோயை இனியும் என்னைக் குறுகாதவாறு துரத்துவதும் மறைப்பதும் தேவரீர் செய்திடீர். அஞ்சேலும் (பயம் கொள்ளாமல் இரும்) என்று அபயமேனும் அளித்திலீர். வஞ்சம் இது ஒப்பது கண்டறியேன் என்பது:- சூலை நோயைக் குறித்ததாகக் கொள்ளாமல் இறைவனுக்கே நெஞ்சத்தையும் அதன் நினைவையும் உரிமையாக்கியதைக் குறித்ததாகக் கொண்டு உரைத்தலும் பொருந்தும். அப்பொருளில் வஞ்சம் என்பதற்குப் பொய் என்றல் பொருந்தும். நெஞ்சம் இடமாக நினைக்கும் செயல் என் அநுபவத்தில் பொய் போல்வதன்று. மெய்யே என்றவாறாம். வல் + து + அம் = வஞ்சம். மரூஉ. அது(தண் + து + அம் =) தஞ்சம் என்ற மரூஉப் போல்வது. நஞ்சு ஆகி - நஞ்சினியல்புடையதாகி. ஆகி - போன்று எனலும் ஆம்; `ஆள்வாரிலி மாடு ஆவேனோ` `என்புழிப்போல. `அஞ்சேலும்`:- அஞ்சேல்` என்னும் முன்னிலை யொருமை ஏவல் வினையின் ஈற்றில் முன்னிலைப் பன்மையேவற்கு உரிய `உம்` விகுதி சேர்த்து அஞ்சேலும் என்றதுணர்க. அஞ்சேல்மின், செய்யல்மின் என்பனவும் அன்ன. வாரும் தாரும் செய்யும் உண்ணும் என்பன உடம்பாடு. வாரேலும், தாரேலும், செய்யேலும், உண்ணேலும் என்பன எதிர்மறை. இவ்வாறு ஆட்சியில் இல்லை. `கொள்ளெலும்` (தி.1 ப. 55 பா.10) கொள்ளேலும் (தி.2 ப.119 பா. 10) எனத் திருஞான சம்பந்தமூர்த்தி சுவாமிகள் திருவாக்கில் வந்தமை கண்டுகொள்க. இஃது அரியதோர் ஆட்சி. என்னீர் - என்று சொல்லீர். வார்த்தையிது ஒப்பது கேட்டறியேன் (பா-5) என்பது போல்வதே, வஞ்சம் இது ஒப்பது கண்டறியேன் என்பது. பாடல் எண் : 3பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர் துணிந்தேஉமக் காட்செய்து வாழலுற்றாற் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர் பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் பெற்றம்ஏற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண் டணிந்தீர்அடி கேள்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. பொழிப்புரை :அதிகை ... அம்மானே! உலகப்பற்றுக்களோடு இணைந்து இறந்தவர்களை எரித்த சாம்பலை உடலில் பூசிக் கொள்ள வல்ல பெருமானே! காளையை இவர்தலை விரும்புகின்றவரே! வெண்தலைமாலை அணிகின்றவரே! உம்மை வழிபடுபவர்களுடைய பாவங்களைப்போக்க வல்லீரே! இறந்துபட்டவருடைய மண்டை யோட்டில் பிச்சை ஏற்றுத்திரிபவரே! உம்மையே பரம்பொருளாகத் துணிந்து உமக்கு அடிமை செய்து அடியேன் வாழக்கருதுதலின், துன்புறுத்தும் சூலைநோயைப் போக்கி அருளுவீராக. குறிப்புரை :பிணி முதலியவற்றால் இறந்தவருடைய உடற் சாம்பலாகிய பொடியைக் கொண்டு திருமேனியிலே பூசவல்லீரே, விடையேறி ஊர்தலை விரும்பினீரே, தலையைச் சுற்றிலும் வெண்டலைமாலை கொண்டு அணிந்தீரே, அடிகளே, திருவதிகைக் கெடிலநதி வடபால் விளங்கும் திருவீரட்டானத்தில் எழுந்தருளியுள்ள அரிய கடவுளே, தேவரீர் நும்மைப் பணிந்தவருடைய தீவினைகளைக் கெடுக்க வல்லீர் ஆயினும், இறந்துபட்டவரது வெண்டலையிலே பிச்சையேற்றுத் திரிவீர். நும் வலிமையை நோக்கி ஆளாகலாம் என்று விருப்பம் எழுகின்றது. நீர் பலிகொண்டுழல்வதை நோக்கி இவர்க்கோ ஆளாவது? இவர்க்கு ஆளாவதில் நமக்குப் பயன் உண்டாமோ? ஆகாதோ? என்று ஐயம் தோன்றுகிறது. `பணிந்தாருடைய பாவங்களைப் பாற்ற வல்லவராதலின் இவர்க்கு ஆளானால் நம் சூலையைத் தொலைத்தருள்வார்` என்று துணிந்து உமக்கே ஆட்செய்து வாழலுற்றேன். அத்துணிவுடன் ஆட்செய்து வாழ்வேனாம்பட்சத்திலும் என்னைச் சுடுகின்றதாகிய சூலை நோயைத் தவிர்த்தருள்வீர். பணிந்தார் + அன் + அ = பணிந்தாரன. வினையாலணையும் பெயர். அன் சாரியையும் ஆறன் வேற்றுமைப் பன்மையுருபும் ஏற்று அவருடைமையாகிய பாவங்கள் என்னும் பன்மைப் பெயர் கொண்டு நின்றது. படுவெண்தலை = பட்டதலை; வெள்தலை. படுதல் - அழிதல்; தலையின் இயல்பிலிருந்து கெடுதல். துணிவு - தெளிவு. `ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்` (குறள்.353) `உமக்கு ஆட்செய்து வாழலுற்றால்` (பாடல் 7). பொடி - இறந்தவரது வெந்த உடம்பின் சாம்பற்பொடி. `சடையும் பிறையும் சாம்பற்பூச்சும் கீளுடையும் கொண்ட உருவம்`. (தி.1 ப.23 பா.1) பெற்றம் - விடை. ஏற்று:- பேச்சு, பாட்டு, கீற்று, கூற்று முதலியன போன்ற பெயர். பின்னீரடியிலும் கொண்டவாறு முதலடியிலும் விளியாகக் கொள்ளல் கூடும். சுற்றும் - தலையைச் சுற்றிலும். `தலைமாலை தலைக் கணிந்து` (தி. 4 ப.9 பா.1) `தலைக்குத் தலை மாலை அணிந்தது என்னே` (தி.7 ப.4 பா.1). அடிகள் என்பது விளியில் அடிகேள் என்று ஆயிற்று. அருமகன்:- அருமான், அர்மான், அம்மான் என மருவிற்று. பெருமகன்:- பெருமான், பெர்மான், பெம்மான் என மருவியவாறும் உணர்க. பாடல் எண் : 4முன்னம்அடி யேன்அறி யாமையினான் முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப் பின்னைஅடி யேன்உமக் காளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர் தன்னைஅடைந் தார்வினை தீர்ப்பதன்றோ தலையாயவர் தங்கடன் ஆவதுதான் அன்னநடை யார்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. பொழிப்புரை :அன்னம் போன்ற நடை அழகை உடைய இளமகளிர் நிறைந்த அதிகை ... எம்மானே! இதற்குமுன் அடியேன் உம்மைப் பரம்பொருளாக அறிந்து உம் தொண்டில் ஈடுபடாமையால் தேவரீர் அடியேனை வெகுண்டமையால், சூலைநோய் என்னை வருத்திச் செயற்பட முடியாமல் செய்யவே, அதன் நலிவுக்கு ஆளாகிய பின்னர் அடியேன் உமக்கு அடிமையாகி விட்டேன். அடியேனை வருத்தும் சூலை நோயைத் தவிர்த்து அருளவேண்டும். மேம்பட்டவர்களது கடமை தம்மைச் சரணமாக அடைந்தவர்களுடைய வினையைப் போக்குவது அன்றோ! குறிப்புரை :முன்னம் அடியேன் என்பது ஒரு தனி வாக்கியம். அறியாமை:- சமண் சமயம் புக்க செயலுக்குப் பண்பாகு பெயர். முனிதல் - ஆண்டவன் வினை. நலிதலும் முடக்கியிடலும் சூலையின் வினை. பின்னையும் என்று உம்மை விரித்துரைக்க. சமண் சார்தற்கு முன்னமும் அடியேன். அதை ஒதுக்கிய பின்னையும் அடியேன். இடையில் நேர்ந்தவை அறியாமையின் விளைவும் அவ்விளைவின் பயனும் ஆம். அவை முறையே சூலையும் அதன் நலிவும் முடக்கிடலும் ஆகும். மூன்றாவதடியில் தன்னை என்றும், தலையாயவர் என்றும் உள்ளது ஒருமை பன்மை மயக்கம் ஆயினும், எதுகை நோக்கியதாகும். என்னை இச் சூலைநோய் பற்றியதன் முன்னும், எனது அறியாமையால் என்னை வெறுத்து இந்நோயால் வருத்தி முடக்கியிடுதலால் பின்னும், அடியேன் குற்றம் அகன்றதும் அன்றி உமக்கு ஆளும் பட்டேன். சமண் சமயம் புகுமுன்னும் அடியேன்; அதை அகன்ற பின்னும் அடியேன்; இடையில் அறியாமையின் விளைவாய் இந் நோயாகிய பயனை எய்தினேன் என்றதுணர்க. அன்ன நடையுடைய மகளிர் மல்கும் திருவதிகைக் கெடில வீரட்டானத்தில் எழுந்தருளிய அம்மானே (நான்) உமக்கு இப்போது தான் அடிமையானேன் அல்லேன். சமண் சமயம் சார்தற்கு முன்னேயே அடியேனாயிருந்தேன். அறியாமையின் விளைவாக அமண் சமயம் புக்கதால் என்னை வெறுத்து, எனக்கு இச்சூலை நோயைக் கொடுத்தாய். அது வருத்தி முடக்கியிடுகின்றது. அதனால் அச்சமயத்தை விட்ட பின்னேயும் உமக்கு ஆளும் பட்டேன். ஆட்பட்டேனையும் சூலை சுடுகின்றது. அதனைத் தீர்த்தருள்வீர். தலைவரானவர் கடன் தம்மை அடைந்தவர் வினையைப் போக்குவது அன்றோ? நான் நின் அடியேன். நீ என்னை ஆண்டாய் என்றால் உன்னை அடைந்த என் வினையைத் தீர்ப்பது அன்றோ தலைவனான உன் கடனாவது? பாடல் எண் : 5காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால் கரைநின்றவர் கண்டுகொள் என்றுசொல்லி நீத்தாய கயம்புக நூக்கியிட நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன் வார்த்தையிது வொப்பது கேட்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட ஆர்த்தார்புனல் ஆர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. பொழிப்புரை :ஆரவாரித்துப் பெருகும் கெடிலக் கரையிலமைந்த அதிகை வீரட்டானப் பெருமானே! குளத்தில் பிறர் இறங்காமல் பாதுகாத்துச் செயற்படுபவர் தம் காவலில் சோர்வு பட்டமையால், கரையில் நின்றவர்கள் இக்குளத்தின் ஆழத்தைக் கண்டு அனுபவிப்பாயாக என்று ஆழமான குளத்தில் விழுமாறு தள்ளிவிட, அக்குளத்தில் ஆழத்தில் நிலையாக நீந்திக் கொண்டிருக்கும் வழிமுறை ஒன்றும் அறியாதேனாகிய அடியேன், சூலைநோய் வயிற்றோடு ஏனைய உள் உறுப்புக்களைக் கட்டி என்னைச் செயற்படமுடியேனாகச் செய்ய, பெருமானாகிய நீயே எல்லாவினைகளையும் போக்கி அருளுவாய் என்றவார்த்தையை இதற்குமுன் கேட்டு அறியாதேனாய் நாளை வீணாக்கினேன். குறிப்புரை :புனல் ஆர் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே:- நீர்நிறைந்த திருவதிகைக் கெடில வீரட்டானத்தில் உறையும் அம்மானே! கயத்தைக் காத்து ஆளுவோரது காவலைப் பொருட் படுத்தாமையால், அதன் கரையில் நின்றவர் இக் கயத்தின் நீராழத்தளவு அறிய வினாவிய என்னை நோக்கி `நீயே இறங்கிக் கண்டு கொள்` என்று சொல்லி (நிலைக்க முடியாதவாறு), இறங்கு துறையில் நீத்துக்கு உரியதாகும் நீர்நிலையில் புகுமாறு நூக்கியிட்டதால், (நீந்த மாட்டாதவனாகி) நிலைக்கொள்ளும் ஒரு வழித்துறையை அறியேனானேன். இதைப் போல்வதொரு வார்த்தை கேட்டறிந்திலேன். காத்தல் - குளத்து நீரைக் கெடுப்பாரைத் தடுத்தல். ஆள்பவர் - காவற்காரர். தம்மைப் பேணுவாரும் ஆவர். இகழ்தல் - பொருட் படுத்தாமை. நீத்து - நீந்து என்னும் முதனிலை திரிந்த தொழிற் பெயர். அடங்கு - அடக்கு, இறங்கு - இறக்கு என்பனவும் அன்ன. முடக்கியிட ஆர்த்தார் (பொருத்தினார்) என்று இயைக்க. ஆர்த்தவரது அதிகை வீரட்டானம் என்க. கயம் - நீர்நிலை. இயற்கைப் பள்ளம்; ஒருவர், இருவர், பலர் வெட்டுவித்ததன்று. நூக்கியிட- `கல்லினோடு எனைப் பூட்டி அமண்கையர் ஒல்லை நீர்புக நூக்கஎன் வாக்கினால் நெல்லு நீள்வயல் நீலக்குடி அரன் நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் .` (தி.5 ப.72 பா.7) என்பது நூக்குமாற்றை நன்கு புலப்படுத்தும். சைவ சமயம் விட்டுச் சமண் சமயம் புக்கதனை உளங் கொண்டு பாடியது. இது பிறிது மொழிதலாகும். காத்தாள்பவர் திலகவதியார் முதலோர், காவல் அவரது அறிவுறூஉ. இகழ்தல் - அவற்றைப் பொருட்படுத்தாது வேற்றுச் சமய நூல்களை ஆராய்ந்தறிதல். கரை நின்றவர் பிற சமயத்தார். கண்டுகொள் என்று சொல்லல் சமண் சமயத் துண்மைகளை உணர்ந்துகொள் என்று மயக்குதல். நீத்தாய கயம்புக நூக்கல் சமண் சமயம் புகச்செய்தல். நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்று அறியாமை வெளிப்படை. அறிந்தால் மீண்டும் சைவத்திற் புகார் அல்லரோ? `வார்த்தை இது ஒப்பது கண்டு அறியேன்` என்பது சைவத்தின் உயர்வு குறித்ததாகக் கோடலும் பொருந்தும். பாடல் எண் : 6சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன் நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம்என் னாவில் மறந்தறியேன் உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய் அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. பொழிப்புரை :அதிகை ... அம்மானே! இறந்தவர் மண்டை யோட்டில் பிச்சை எடுத்துத் திரியும் பெருமானே! என் உடலின் உள்ளாய் வருத்தும் சூலைநோயைப் போக்கி அருளுவாயாக. இனி அபிடேகத்தீர்த்தத்தையும் பூவையும் உனக்கு சமர்ப்பிப்பதனை மறவேன். தமிழோடு இசைப்பாடலை மறவேன். இன்புறும் பொழு திலும் துன்புறும் பொழுதிலும் உன்னை மறவேன். உன் திருநாமத்தை என் நாவினால் ஒலிப்பதனை மறவேனாய் இனி இருக்கிறேன். சலம் பூவொடு தூவ - பாடம். குறிப்புரை :திருவதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே! நீரும் மலரும் புகையும் (பிறவும்) கொண்டு நின்னை வழிபடுவதை மறந்தறியேன். தமிழ் மொழியில் அமைந்த நின்புகழோடு இசை பாடுதலை மறந்தறியேன். நன்கிலும் தீங்கிலும் உன்னை மறந்தறியேன். உன் திருப்பெயரை என் (புல்லிய) நாவில் வைத்துச் சொல்லுதலை மறந்தறியேன். இறந்த நான்முகனார் தலையிலே பிச்சையேற்றுக் கொண்டு திரிபவனே! (அடியேன்) உடலின் உள்ளே மிக்கு வருத்தும் சூலை நோயைத் தீர்த்தருள்வாய். அடியேன் வருந்துகின்றேன். சலம் - ஜலம். `பூவொடுதூபம்` `தமிழோடிசை` என்பன முறையே அருச்சனையிலும் தோத்திரத்திலும் உள்ளனவாய் உடனிகழ்வன ஆதலின், முதலடிக்கண் வந்த மூன்றனுருபு உடனிகழ்ச்சிப் பொருளவாயின. இருவினையும் பற்றி விளையும் இன்பத் துன்பங்களை நலம் (நன்கு) தீங்கு என்றருளினார். `உன்`, `என்` என்பவற்றின்கண் முறையே இறைமையாகிய மேலுக்கும் அடிமையாகிய கீழுக்கும் உள்ள வரம்பு ஒலித்தல் காண்க. `மேலுக்கு நீவரம்பாயினை ... ... கீழுக்கு நான் வரம்பாயினேன்`. (சிவஞான பாலைய - கலம்பகம் 90) உலந்தார் - இறந்தவர்; வாழ்நாள் கடந்தவர். `உக்கார் தலைபிடித்து உண்பலிக்கு ஊர்தொறும் புக்கார்`(தி.4 ப.16. பா.4). `மாண்டார் தம் என்பும்` (தி.4 ப.16 பா.9) என்றதில் உள்ள வரலாறு வேறு. உடல் வயிற்றைக் குறித்ததுமாம். அலந்தேன் - ஈண்டு நிகழ்வு உணர்த்திற்று. மறந்திருந்த குற்றமும் அதற்குக் காரணமும் பழம் பிறவிகளின் நிகழ்ச்சி. அதனை `ஏழை மாரிடம் நின்று இரு கைக்கொடுஉண் கோழை மாரொடும் கூடிய குற்றமாம் கூழைபாய் வயற் கோழம் பத்தானடி ஏழையேன் முன் மறந்து அங்கு இருந்ததே` (தி.5 ப.65 பா.8) என்னும் திருக்குறுந்தொகையால் அறியலாம். பாடல் எண் : 7உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும் ஒருவர்தலை காவல் இலாமையினால் வயந்தேஉமக் காட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர் பயந்தேயென் வயிற்றின் அகம்படியே பறித்துப்புரட் டிஅறுத் தீர்த்திடநான் அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. பொழிப்புரை :அதிகை ... அம்மானே! அடியேனுக்குத் தலைவராக இருந்து அடியேனை நெறி பிறழாமல் காப்பவர் ஒருவரும் நும்மை யல்லாது இல்லாத காரணத்தினால் மனையிலிருந்து வாழும் இல்லற வாழ்க்கையிலும் அதற்கு வேண்டியதாய் நன்னெறியில் ஈட்டப்படும் பொருள் தேடும் செயலிலும் நீங்கினேன். என் வயிற்றினுள்ளே யான் அஞ்சுமாறு குடலைப் பறித்தெடுத்துப் புரட்டி அறுத்துச் சூலை நோய் உள் உறுப்புக்களை இழுக்க, அடியேன் தாங்க முடியாதவனாகி விட்டேன். இனி, உமக்குத் தொண்டனாகி நான் வாழக்கருதினால், அதற்கு ஏற்ப என்னைத் துன்புறுத்தும் சூலைநோயைப் போக்கி அருளுவீராக. குறிப்புரை :என்னைத் தலைமையராய்க் காவல்புரிவார் நும்மையல்லாது வேறு ஒருவரும் இல்லாமையால், மனையிலிருந்து வாழும் வாழ்க்கையினும் அதற்கு வேண்டியதாய் நன்னெறியில் வாழும் பொருளினும் நீங்கினேன்; முற்செய் தவச் சிறப்பால் விளங்கினேனாகி நுமக்கே ஆளாகித் தொண்டு செய்து வாழ்தல் உற்றேன். உற்ற என்னைத் துன்புறுத்துகின்றதாகிய சூலை நோயைத் தீர்த்தருளா திருக்கின்றீர். என் வயிற்றின் உள்ளடியில் குடலைப் பறித்துப் புரட்டி அறுத்து இழுத்திடலால் அடியேன் அஞ்சி அயர்ந்தேன். உயர்தல் - ஈண்டு நீக்கத்தைக் குறித்து நின்றது. `உக்கத்து மேலும் நடுவுயர்ந்து` `தலைக்கு மேலும் நடு இல்லையாய்` (கலித்தொகை 94) `நடுவுயர்ந்து என்றது நோன்புயர்ந்தது என்றாற்போல நின்றது`. `உயருமன் பழி` - `தாம் செய்த பழி மிகவும் போம்` `உயர்தல் - நோன்புயர்தல் போல நீக்கத்தின் கண் நின்றது`. (கலித்தொகை 129) என்புழி ஆசிரியர் நச்சினார்க்கினியர் எழுதியுள்ள உரையை ஈண்டு நோக்குக. பிங்கலந்தை 1760 பார்க்க. வயந்து - வளர்ந்து; வயமாக்கி. விளங்கி எனின் வயங்கி எனல் வேண்டும். வயக்கம் - விளக்கம். `வெண்ணிற வயக்கம் மாண்டது`. (தணிகைப். நாட்டுப்.15) பழக்கமும் ஆம். இலாமையினால் உயர்ந்தேன் என்க. வயந்து என்றதோ டியைத்தும் பொருள் கொள்ளலாம். ஆயினும் அடுத்த திருப் பாடலை நோக்கின், அது பொருந்தாமை காண்க. தலை என்பது சினையாகு பெயராய்த்தலைவர் என்னும் பொருட்டாய் ஒரு தலைவர் என நின்று, தலைவர் ஒருவர் காவல் இல்லாமையினால் உயர்ந்தேன் என்று இயைத்துக் கொள்ளலாயிற்று. ஆசிரியர்க்கு மனைவாழ்க்கையும் பொருளும் இல்லாமையும், `புல்லோடும் கல்லோடும் பொன்னோடும் மணியோடும் சொல்லோடும் வேறுபாடிலா நிலைமை துணிந்திருந்த நல்லோர்` ஆய் உள்ளமையும்; பொன்னும் மணியும் உழவாரத்தினில் ஏந்தி எறிந்தமையும், அரம்பையர்கள் புரிந்தவற்றால் நிலை திரியாத சித்தத்தினை அத்தனார் திருவடிக்கீழ் நினைவகலா அன்புருகு மெய்த் தன்மை யுணர்வொடு நிறுத்திச் செய்பணியின் தலை நின்றமையும் அறிவார்க்கு உயர்ந்தமை (நீங்கினமை) உடன்பாடாம். தி.4 ப.26 பா.4, 7; ப.52.பா.3,5,8; ப.54 பா.6; ப.67 பா.6, 9; ப.69 பா.9; ப.78 பா.9ஆகிய பாக்களின் உள்ளவாறு உண்டு என்பார்க்கு உடன்பாடன்று. `கருவுற்றிருந்துன் கழலே நினைந்தேன்` (தி.4 ப.96 பா.5) `கருவுற்ற நாள் முதலாக வுன்பாதமே காண்பதற்கு உருகிற்று என் உள்ளமும் நானும் கிடந்து அலந்து எய்த்தொழிந்தேன் திருவொற்றியூரா! திருவாலவாயா! திருவாரூரா ஒருபற்று இலாமையுங் கண்டிரங்காய் கச்சியேகம்பனே.` (தி.4 ப.99 பா.6); `கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்` (தி.4 ப.94 பா.6); கருவுற்ற காலத்தே என்னை ஆண்டு கழற்போது தந்தளித்த கள்வர்` (தி.6 ப.8 பா.99) என்ற ஈசர் வாக்கால் அவ் வாகீசர்க்கு மனை அறம் இல்லை என்னாது உண்டென்பார்க்கு நரகம் இல்லாது போமோ? `அப் பற்றல்லது மற்றடிநாயினேன் எப்பற்றும் இலன் எந்தை பிரானிரே` (தி.5 ப.96 பா.9) என்ற அப்பர்க்கு மனை வாழ்க்கைப்பற்று இருந்ததாகக் கோடல் பொருந்துமோ? அவர்க்குப் பற்று இருந்ததாகக் கொள்ளினும், நம்மனோர்க்குள்ள அளவினது அன்று அது. ஏகனாகி இறைபணிநிற்கும் உண்மை நிலையினரிடத்தும் அஞ்ஞான கன்மப்பிரவேசம் உண்டு என்று அருள் நூல்கள் உணர்த்துகின்றன. அக்கன்மப் பிரவேசம் உளதாகாவாறு தடுக்கும் வழி அவனருளால் அல்லது ஒன்றையும் செய்யாமை. அஃதாவது (ஏகனாகி) இறைபணி வழுவாது நிற்றலாகும். அத்தகையோர்க்கும் அஞ்ஞான கன்மப் பிரவேசம் உண்டாகலாம் எனின், அதனை நம்மனோர்க்கு உள்ள பற்றினளவை நிகர்த்ததாகக் கொள்ளலாமோ? ஏகனாதலும் இறைபணி நிற்றலும் எங்கே? நாம் எங்கே? அத்தகைய சிற்றளவு பற்றுக்கே அப்பர் வருந்துகின்றார் எனக் கொண்டுரைத்தல் தக்கது. அப்பொழுது `உயர்ந்தேன்` என்பது மிகுதிப்பொருட்டாகும். சிவனது இச்சையே தனது இச்சை; சிவனது அறிவே தனது அறிவு; சிவனது செயலே தனது செயல். தனக்கென இச்சையும் ஞானமும் கிரியையும் உரியனவாய் இல்லை என்று சிவனுடைய இச்சாஞானக்கிரியை நிகழ்ச்சிகட்குத் தான் ஒரு கருவியாக நின்று ஒழுகுவதே இறைபணி நிற்றலாகும். பசுகரணம் சிவகரணமாதல் இன்னதே. திருக்களிற்றுப்படியார்க்குள்ள பழைய உரைகளுள் ஒன்று (சிதம்பரம், சைவத்திரு. முத்து. வைத்தியலிங்கச் செட்டியார் அவர்கள் பதிப்பு. பக்கம்.64). `சிவன்முதலே அன்றி முதல் இல்லை என்றும் சிவனுடையது என்அறிவது என்றும் - சிவனவனது என்செயலது ஆகின்றது என்றும் இவையிற்றைத் தன்செயலாக் கொள்ளாமை தான்.` (திருக்களிறு - 64) என்னும் திருவெண்பாவிற்கு உரிய உரையின் முதற்கண், `முதல் என்பது இச்சை ஞானம் கிரியை மூன்றில் முதலிற் கூறியது இச்சையின் மேற்று` `சிவனுடைய இச்சையே அன்றி நமக்கு இச்சையில்லை` என்று உணர்த்துகின்றது. ஆங்கு, அறிவும் செயலும் கூறப்படுதலின், `முதல்` என்றது இச்சை என்னும் பொருளதேயாகும். இதனை அறியாதார் வேறு கூறுவது பொருந்தாது. அதனால், `முதல்` என்றது இச்சையையே. அடுத்த இரண்டும் சிவனது ஞானம் சிவனது கிரியை என ஆறனுருபிற் கூறியதால், `சிவன் முதல்` என்றதும் ஆறன்றொகையாகும். எழுவாய்த் தொடராகாது. பசுகரணங்கள் சிவகரணமாகத் துன்னிய சாக்கிரமதனில் துரியாதீதம் தோன்ற முயன்று சுவாநுபூதிகமான சிவாநுபவம் உடையவர்க்கு அம்மூன்றும் சிவனுடையனவாக நிகழ்வனவே ஆகும். ஆகாவேல், சிவகரணம் அல்ல; பசுகரணமே அவை. அவரும் சிவாநுபவத்தரல்லர். திருக்களிற்றுப்படியாரில் 63 - ஆவது திருவெண்பாவில், கூட்டில் வாட்சார்த்தி நில்லாதார் வீட்டிலே சென்று வினையொழிந்து நின்றாலும் நாட்டிலே நின்று நல்வினைகள் செய்தாலும் பயனொன்றும் இல்லை என்று கூறி, அடுத்த திருப்பாட்டிலே கூட்டிலே வாட்சார்த்தி நிற்குமாறு விளக்கப்பட்டது. அஃது இறைபணி நிற்றலாகும். `ஆன்மாவினது இச்சா ஞானக் கிரியை ஆகிய பசுகரணங்கள் சிவனது கரணமாகிய இச்சா ஞானக் கிரியை முழுதும் ஆவதே ஆன்ம தரிசனம்` (தருமையாதீனத்து வெளியீடாகிய சிவாநந்த போத சாரத்தின் உரை) ஆன்ம தரிசனமும் சிவரூபமும் ஒருங்கு நிகழ்வன. `சடசித்துக்கள் முழுவதும் சுகப்பிரபையே தனக்கு வடிவாக உடைய சிவம் கலத்தலால் சிவமயம் எனப் பிரபஞ்சத்தைக் காண்பது சிவரூபம் ஆம்.` (சிவாநந்த போத சாரம் உரை) இவற்றால், `முதல்` என்றது இச்சையே ஆதல் இனிது விளங்கும். `நாயகன் எல்லா ஞானத் தொழில் முதல் நண்ணலாலே காயமோ மாயை அன்று காண்பது சத்திதன்னால்` (சித்தியார். சுபக்கம். சூ. 1 - 41) எனவும், `இறைவனாவான் ஞானம் எல்லாம் எல்லா முதன்மை அநுக்கிரகம் எல்லாம் இயல்புடையான், (சித்தியார். சூ. 8:- 17) எனவும் வரும் இடங்களிலும் முதல் என இச்சையைக் குறித்தது காண்க. நெறிப்பட நிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமையன் ஆகிய நின்மலன் நினைந்த மேனி நிறுத்தும் முதன்மையன் என்பதில் ஐயம் ஏது? பராசத்தியின் முதல் வேறுபாடு இச்சையாதலினாலும் ஞானம் கிரியைகட்கு (இச்சையாதி) முன்னது ஆதலினாலும் `முதல்` எனப்பட்டது. பாடல் எண் : 8வலித்தேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன் வஞ்சம்மனம் ஒன்றும் இலாமையினால் சலித்தால்ஒரு வர்துணை யாருமில்லைச் சங்கவெண்குழைக் காதுடை யெம்பெருமான் கலித்தேயென் வயிற்றின் அகம்படியே கலக்கிமலக் கிட்டுக் கவர்ந்துதின்ன அலுத்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. பொழிப்புரை :அதிகை ... அம்மானே! வெண்ணிறச் சங்கினால் ஆகிய குழை என்னும் காதணியை அணிந்துள்ள பெருமானே! அடியேன் மனத்தில் வஞ்சனை ஒன்றும் இல்லாமையினால் மனையின்கண் மகிழ்ந்து வாழும் வாழ்க்கையைக் காய்ந்தேன். சூலை நோய் அடியேன் வயிற்றகத்தே செருக்கிக் கலக்கி வயிற்றின் பகுதிகளை மயக்கிக் கைக்கொண்டு துன்புறுத்துதலால் அடியேன் உயிர் வாழ்தலை வெறுத்து விட்டேன். வருந்தும்போது அடியேனுக்குத் துணையாவார் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை. அடியேனை நோயினின்றும் காத்தருள்க. குறிப்புரை :அடியேன் மனை வாழ்க்கையை மகிழ்ந்து வலித்தேன். காரணம் யாது? மனவஞ்சம் ஒரு சிறிதும் இல்லாமையினால். துணை யாருமில்லை - துணையாவார் யாருமில்லை. என் வயிற்றின் உள்ளடியிலே செருக்கி வளர்ந்து துன்புறுத்திப் பிறழச் செய்து (சிந்தா. 1067 - 1613) பறித்துத் தின்ன அடியேன் சோர்ந்தேன். ஒருவர் என்பது ஒருவா என்றிருந்ததோ? பாடல் எண் : 9பொன்போல மிளிர்வதொர் மேனியினீர் புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர் துன்பேகவ லைபிணி யென்றிவற்றை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர் என்போலிகள் உம்மை யினித்தெளியார் அடியார்படு வதிது வேயாகில் அன்பேஅமை யும்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. பொழிப்புரை :அதிகை ... அம்மானே! பொன்னார் மேனியினீர்! முறுக்குண்ட செஞ்சடையீர்! கலைகுறைந்த பிறையை உடையீர்! துன்பம் கவலை பிணி என்னும் இவை அடியேனை அணுகாமல் அவற்றை விரட்டுதலையும் மறைத்தலையும் செய்யீராயின் அடியேனைப் போன்றவர்கள் இப்பொழுது உங்களைத் துன்பம் துடைக்கும் பெருமானாராகத் தெளியமாட்டார்கள். எனினும், உங்கள் அன்பே எங்கள் துயர்துடைத்து எங்களை அமைவுறச்செய்யும். குறிப்புரை :பொன்னைப் போல ஒளி செய்வதொரு திருமேனியுடையீர்! முறுக்குண்ட பொற்சடையீர்! கலையிற் குறையும் பிறையுடையீர்! துன்பமும் கவலையும் பிணியும் நணுகாமல் துரந்தும் இடீர். கரந்தும் இடீர். என்னைப்போல்வார்கள் இனி உம்மைத் தெளிய உணரமாட்டார்கள். அடியார் படுவது இதுவே ஆகிலும் அன்பே அமையும். வீரஸ்தாநம் - வீரட்டானம். மூலஸ்தாநம் - மூலட்டானம் என்பது போல்வது. மிளிர்தல் - விளங்குதல், புன்சடை - பொன்போலும் செஞ்சடை. புன்மை (அற்பம்) எனல் சிவாபராதம். மெலிதல் - கலையிற் குறைதல். பிறை - பிறத்தலாகிய ஏதுப்பற்றிய பெயர். பிணித்தல் - கட்டுதல். கட்டில் - பிணிப்பினையுடைய இல்வாழ்கை (சிந்தாமணி 8.63). `துன்பத்தால் தொடக்கினேன்` (சிந்தாமணி 3.86) என்ற இடத்து, துன்பமும் அதனாலுறும் பிணிப்பும் வேறாதல் நன்கு விளங்கும். யாது செய்வல் என்ற கவலை (சிந்தாமணி 1.302). அமைதி - நிறைவு (சிந்தா. 1.78). என்போலிகள் - போல்பவன், போல்பவள், போல்வது மூன்றும் போலிகள் எனப்படும். போல்வார் எனல் பொருந்தாது. கள் ஈறு சேர்ந்து பலர்பாலைக் குறிக்கலாயிற்று. ஆகவே தெளியார் என்னும் பயனிலை கொண்டது. பாடல் எண் : 10போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் புறங்காடரங் காநட மாடவல்லாய் ஆர்த்தான்அரக் கன்றனை மால்வரைக்கீழ் அடர்த்திட் டருள்செய்த அதுகருதாய் வேர்த்தும்புரண் டும்விழுந் தும்எழுந்தால் என்வேதனை யான விலக்கியிடாய் ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. பொழிப்புரை :ஆரவாரித்து நிரம்பும் நீரைஉடைய கெடிலக் கரையிலமைந்த திருவதிகை வீரத்தானத்து உகந்தருளி உறையும் அம்மானே! பண்டு ஓர் யானையின் உதிரப் பசுமை கெடாத தோலைப் போர்த்தவனே! சுடு காட்டையே கூத்தாடும் அரங்காகக் கொண்டு கூத்து நிகழ்த்துதலில் வல்லவனே! ஆரவாரித்துக் கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனை அப்பெரியமலையின் கீழ் நசுக்கிப்பின் அருள் செய்த அதனை நினைத்துப்பார்த்து, வியர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தும் அடியேன் சூலை நோயினால் அநுபவிக்கும் துன்பங்களை நீக்கி அருளுவாயாக. குறிப்புரை :ஆர்த்து ஆர் புனல் சூழ் அதிகை - ஒலித்து நிறையும் நீர் சூழ்ந்த திருவதிகை. அங்குத் (தக்கயாகத்தில்) துன்பம் விளைப்பதில் ஒப்பிலாத யானையின் ஈர்மை பொருந்திய உரித்த தோலைப் போர்த்தாய்! புறங்காடே அரங்கமாகத் திருக்கூத்து ஆடவல்லாய். வீரமுழக்கத்தொடு கயிலைமால்வரையைத் தூக்க முயன்ற அரக்கனான இராவணனை அம்மலையின் கீழ் அகப்பட்டு நசுக்குறச் செய்து, அவனது சாமகானத்தைக் கேட்டுத் திருவுளம் இரங்கித் திருவருள் அளித்த அதனை ஈண்டு எண்ணுகிலாய். (எண்ணுவையேல்) வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தும் மற்று யாது நிகழ்ந்தாலும் என் துன்பங்களானவற்றை விலக்கிடுவாய். எண்ணாமையால் விலக்கியிடுகிலாய் எழுந்தாலும் என்க. உம்மை தொக்கது. நன்றி - http://www.thevaaram.org/ |
Sri Vilvavaneshwarar
Wednesday, March 2, 2011
பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்... (திருமுறை 4)
பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்... (திருமுறை 3)
திருமுறை 3
கோயில்பாடல் எண் : 1ஆடி னாய்நறு நெய்யொடு பால்தயிர் அந்த ணர்பிரி யாதசிற் றம்பலம் நாடி னாய்இட மாநறுங் கொன்றை நயந்தவனே பாடி னாய்மறை யோடுபல் கீதமும் பல்ச டைப்பனி கால்கதிர் வெண்டிங்கள் சூடி னாய்அரு ளாய்சுருங்கஎம தொல்வினையே. பொழிப்புரை :நறுமணம் உடைய நெய்யும் , பாலும் , தயிரும் ஆட்டப் பெற்றவனே ! தில்லைவாழந்தணர் எல்லோரும் எப்பொழுதும் அகத்தும் புறத்தும் பிரியாது வழிபடும் திருச்சிற்றம்பலத்தைத் திருக்கூத்தாடும் ஞானவெளியாகக் கொண்டு வாழ்பவனே ! நறிய கொன்றைப் பூமாலையை நயந்து ( விரும்பிச் ) சூடியவனே ! நான்மறையுள் சாமகானத்துடன் பல கீதங்களையும் பாடியவனே ! பலவாகிய சடைமேல் , குளிர் பனியைச் சொரிகின்ற வெண்ணிலவை யுடைய இளம் பிறையைச் சூடியவனே ! எம் தொல்லை வினை இல்லையாம்படி திருவருள் செய்க . குறிப்புரை :எல்லாத் தலங்களுள்ளும் ஓர் ஆண்டிற்குள் ஆறு நாள் அபிடேக விசேடமுடைய தலம் சிதம்பரமேயாதலின் ` ஆடினாய் ` என்பது திருநடனத்தையும் கருதிய தொடக்கம் உடையதாகி நின்றது . தில்லைவாழ் அந்தணருள் நடராசப் பிரானாரும் ஒருவராதலின் , பிரியாமை பிரியாதுள்ளது . சிற்றம்பலம் - ஞானாகாசம் , பூதாகாசத்தைப் பிரித்தல் ஒல்லும் , கடத்தற்குரிய தத்துவங்களுள் ஒன்று அது , ஞானாகாசத்தைப் பிரிதல் என்றும் எவ்வுயிர்க்கும் இல்லை . நாடுதல் - சங்கற்பம் . நயத்தல் - விரும்புதல் . மறை - சாமவேதம் , பிறவும் கொள்ளப்படும் . கீதம் - இசைப்பாடல் . திங்கள் சூடிய கருணைத் திறம் , தொல்வினைச் சுருக்கம் வேண்டுங்கால் குறித்தற்பாலது , பல் சடை எனப்பன்மையும் , புன் சடை எனக் குறுமையும் , நீள் சடை என நெடுமையும் பொன் சடை என நிறமும் , விரி சடை எனப் பரப்பும் , நிமிர் சடை என உயர்ச்சியும் பிறவும் திருமுறையுட் காணப்படும் . பொன் சடையைப் புன் சடை எனலும் உண்டு . ` அந்தணர்தம் சிந்தையானை ` ( தி .6 ப .1 பா .1) ` அரியானை என்று எடுத்தே அடியவருக்கு எளியானை , அவர் தம் சிந்தை பிரியாத பெரிய திருத்தாண்டகச் செந்தமிழ் பாடிப் பிறங்கு சோதி விரியா நின்று எவ்வுலகும் விளங்கிய பொன்னம்பலத்துமேவி ஆடல் புரியா நின்றவர் தம்மைப் பணிந்து தமிழாற் பின்னும் போற்றல் செய்வார் ` ( பெரியபுராணம் திருநாவு . பா - 175) என்பவற்றால் சிந்தையும் சிவபிரானும் பிரியா வினைக்கு முதலாதல் விளங்கும் . ` நின்று சபையில் ஆனந்த நிர்த்தமிடுவோர்க்கு ஆளாயின் வென்ற பொறியார்க்கு ஆனந்த வெள்ளம் பெருக வுய்ப்பர் ` ( பேரூர்ப் புராணம் . நாவலன் வழிபடு படலம் . பா - 23) என்னும் உண்மையைத் தெளிவிக்க ஆடினாய் என்றெடுத்தார் . ஆடினாய் நறுநெய்யொடு பால் ` பாதமலர் சூடுகின்றிலை சூட்டுகின்றதுமிலை ` என்னுந் திருவாசகத்தில் ( பா .35) பாதமலர் என்னும் தொடர் இயைவது போல மீளவும் நெய் , பால் , தயிர் ஆடினாய் என்று இயைவது உணர்க . சிவ வழிபாட்டிற்கு , கூறப்படும் உபசாரங்கள் பலவற்றினும் , அபிடேகமே சிறந்தது ஆதலின் , அதனை எடுத்துக் கூறினார் . அதனை , ` சிவதருமம் பல . அவற்றுட் சிறந்தது பூசனை . அதனுள் , அவமில் பல உபசாரத்தைந்து சிறந்தன .` ` ஆங்கவை தாம் அபிடேகம் அரிய விரை , விளக்கு , மனுத்தாங்கும் அருச்சனை , நிவேதனம் ஆகும் ` என்னும் கச்சியப்ப முனிவர் வாக்கால் அறிக . ( பேரூர்ப் புராணம் மருதவரைப் படலம் . 29) ` தேன் , நெய் , பால் , தயிர் ஆட்டுகந்தானே ` முதலியவற்றையும் நோக்குக . அந்தணர் - தில்லைவாழந்தணர் . எவ்வுயிர்க்கும் கருணைக் கடலென்பார் , வேதியர் மறையோர் என்னாது அந்தணர் என்று அருளினார் . மெய்ஞ்ஞானிகள் , அவனருளே கண்ணாகக் கண்டு திளைக்க , ஆனந்தக் கூத்தாடும் பரஞானவெளி ஆதலின் , ஊன் அடைந்த உடம்பின் பிறவி , தான் அடைந்த உறுதியைச் சார , ஆதியும் நடுவும் முடிவும் இல்லாத அற்புதத் தனிக் கூத்தாடும் இடம் சிதம்பரம் , ஞானாகாசம் எனப்பெற்றது . ` சிற்பரவியோமம் ஆகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று பொற்புடன் நடஞ் செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி ` என்றருளிய சேக்கிழார் திருவாக்கினாலும் ( பெரியபுராணம் தில்லைவாழ்அந்தணர் பா .2) உணர்க . நறும் - நறுமணம் உள்ள , கொன்றை - மந்திரங்களிற் சிறந்ததாகிய பிரணவ மந்திரத்துக்குரிய தெய்வம் , தாமே எனத் தெளியச்செய்ய , கொன்றை மாலை யணிந்தனர் . அம்மலர் , உருவிலும் பிரணவ வடிவாயிருத்தலின் பிரணவ புட்பம் எனப்படும் . ` துன்றுவார் பொழில் தோணிபுரவர்தம் , கொன்றைசூடும் குறிப்பது வாகுமே ` ( தி .5 ப .45 பா .7) என்னும் திருக்குறுந்தொகையாலும் ` ஓரெழுத்திற்குரிய பொருள் உயர்நெடு மாலயன் என்பார் நீரெழுத்து நிகர் மொழி நின்னில விதழிமுன் என்னாம் ` என்னும் வாட்போக்கிக் கலம்பகப் பாட்டாலும் அறிக . பனிகால் கதிர் - குளிர்ச்சியை வீசும் ஒளியையுடைய , வெண் திங்கள் சூடினாய் என்றது , ` உற்றார் இலாதார்க்குறுதுணையாவன ` சிவபிரான் திருவடியே என்பதைக் குறிக்கும் . தொல்வினை என்றது சஞ்சித கருமத்தை . பல்சடை - பூணூல் அபரஞானத்தையும் , சடை பரஞானத்தையும் குறிக்கும் என்ப . அதனாலும் , சிவசின்னங்களில் சடையே சிறந்ததாயிருத்தல் புகழ்ச்சோழ நாயனார் வரலாற்றாலும் , விடந்தீர்க்க வேண்டித் திருமருகற் பெருமானை இரத்தற்கண் ` சடை யாய் எனுமால் ` என்றெடுத் தருளினமையானும் அறியப்படும் . பாடல் எண் : 2கொட்ட மேகம ழும்குழ லாளொடு கூடி னாய்எரு தேறி னாய்நுதற் பட்ட மேபுனை வாய்இசை பாடுவ பாரிடமா நட்ட மேநவில் வாய்மறை யோர்தில்லை நல்ல வர்பிரி யாதசிற் றம்பலம் இட்ட மாஉறை வாய்இவை மேவிய தென்னைகொலோ. பொழிப்புரை :நறுமணம் கமழும் கூந்தலை உடைய சிவகாமி அம்மையாரொடு கூடியவனே , விடையேறியவனே , நெற்றிப் பட்டம் அணிந்தவனே , பூத கணங்கள் இசை பாடுவனவாகத் திருக்கூத்தாடுவோனே , ( அறிதற்கரிய ) வேதங்களை ஓர்கின்ற தில்லையில் வாழும் நல்லவராய அந்தணர் பிரியாத திருச்சிற்றம்பலத்தே விருப்பொடு வாழ்பவனே ! இவ்வைந்து கருணைச் செயல்களையும் மேவியது யாது காரணம் பற்றியோ ? கூறியருள்க . குறிப்புரை :பாரிடம் - பூதம் . நட்டம் - நடனம் . நவிலுதல் - பழகுதல் . ` நட்டம் பயின்றாடும் நாதனே ` மறையோர் - வேதங்களை ஓர்கின்ற . ஓர் நல்லவர் - மறையோராகிய நல்லவர் எனலுமாம் : நல்லவர் ,. சரியை கிரியா யோகங்களைச் செய்து பெறும் நன்னெறியாகிய ஞானத்தைப் பெற்றவர் . கொட்டம் - நறுமணம் ` கொட்டமே கமழுங் கொள்ளம் பூதூர் ` எனப் பின்னும் வருதல் காண்க . நுதற் பட்டம் நெற்றியில் அணியும் ஓர் அணி . ` பட்ட நெற்றியர் நட்டமாடுவர் `. வீரர் அணிவது ` நுதலணியோடையிற் பிறங்கும் வீரப் பட்டிகை ` என்பதாலறிக . இசை பாடுவ - பாரிடம் ஆ ( க ) - பாரிடம் இசை பாடுவன ஆக . பாரிடம் - பூதங்கள் . நட்டம் நவில்வாய் - திருக்கூத்தாடியருள்வீர் . ` ஆளும் பூதங்கள் பாடநின்றாடும் அங்கணன் என வன்றொண்டப் பெருந்தகையார் அருளிச் செயலும் காண்க . நல்லவர் - நல்லொழுக்கின் தலைநின்றவராகிய தில்லைவாழந்தணர் . நன்னெறியாகிய ஞானத்தை யுடையாருமாம் . இவை மேவியது என்னை கொலோ ? - என்று வினவுகின்றார் , அவை பெண் விருப்புடையான் போற் பெண்ணோடு கூடியிருத்தலும் , ஊர்தியாக ஏறு ஏறுதலும் , அணிவிருப்புடையான் போல் நெற்றிப் பட்டம் அணிந்தமையும் , கண்டார் அஞ்சத்தக்க பூதங்களோடு கூடியாடுதலும் , உலகில் எத்தனையோ தலங்களிருக்கத் , தில்லைச்சிற்றம்பலத்தை இட்டமாக விரும்பியதும் அறிக . பாடல் எண் : 3நீலத் தார்கரி யமிடற் றார்நல்ல நெற்றி மேல்உற்ற கண்ணி னார்பற்று சூலத் தார்சுட லைப்பொடி நீறணி வார்சடையார் சீலத் தார்தொழு தேத்துசிற் றம்பலம் சேர்த லால்கழற் சேவடி கைதொழக் கோலத் தாய்அரு ளாய்உன காரணம் கூறுதுமே. பொழிப்புரை :நீல நிறத்தைப் பொருந்திய கரிய திருக் கழுத்தினர் ( திருநீலகண்டர் ). அழகிய நெற்றிக் கண்ணினர் . திரிசூலம் பற்றியவர் , காடுடைய சுடலைப் பொடி பூசியவர் , சடையினர் , சீலம் மிக்கவர் ஆகிய தில்லைவாழந்தணர் வணங்கியேத்தும் திருச்சிற்றம்பலத்தை இடைவிடாது நினைந்து சேர்தலால் . திருக்கோலம் உடைய நடராசப் பெருமானே ! நின் கழலணிந்த சேவடியைக் கையால் தொழ அருள் செய்தாய் . உன்னுடைய காரணங்களை (முதன்மையை)க் கூறுவேம் . குறிப்புரை :இத்திருப்பாடல் , தில்லைக்குச் செல்லுங்கால் , திருஞானசம்பந்த சுவாமிகளுக்கு எதிர்வந்து தில்லைவாழந்தணர்கள் சிவகண நாதர்களாகத் தோற்றம் அளித்த உண்மையை உணர்த்திற்று . நீலத்து - நீலமணியைப் போல் , ஆர் - பொருந்திய , கரிய - கருமையையுடைய . நீலம் , கறுப்பு , பச்சை இவற்றுள் ஒன்றைப் பிறிது ஒன்றாகக் கூறும் வழக்கு உண்மையை ` பச்சைப் பசுங் கொண்டலே ` ( மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் . பா .1) என்று வருவதாலும் அறிக . மிடற்றார் - கண்டத்தையுடையவர் , பற்று சூலத்தார் - கையில் சூலம் பற்றியவர் , சேர்தலால் பற்றுக் கோடாக , நாங்கள் சேர்ந்தமையாலும் , உன காரணம் கூறுதும் - எல்லாவற்றிற்கும் நீயே காரணனாம் தன்மை களைக் கூறுவோம் . கோலத்தாய் அருளாய் - அழகையுடையவனே , உன் சிவந்த திருவடி மலர்களைத் தொழ எமக்கு அருள்வாயாக . சேவடி ( யைத் ) தொழ அருளாய் எனக் கூட்டுக . ` அவனருளாலே அவன் தாள் வணங்கி ` என்றல் கருத்து . நீலகண்டம் , முக்கண் , சூலம் , திருநீற்றுப் பூச்சு , வார்சடை இக்கோலத்தோடும் தில்லைவாழந்தணரைத் தாம் கண்டமை குறித்தருள்கிறார் . இதனைச் சேக்கிழார் பெருமான் ` நீடும் திருத்தில்லை யந்தணர்கள் நீள் மன்றுள் ஆடும் கழற்கு அணுக்க ராம்பேறு அதிசயிப்பார் ` ( பெரிய . திருஞா . பா - 168) என்று தொடங்குவது முதலிய பாடல்களில் குறித்தருள்வது காண்க . பாடல் எண் : 4கொம்ப லைத்தழ கெய்திய நுண்ணிடைக் கோல வாள்மதி போலமு கத்திரண் டம்ப லைத்தகண் ணாள்முலை மேவிய வார்சடையான் கம்ப லைத்தெழு காமுறு காளையர் காத லால்கழற் சேவடி கைதொழ அம்ப லத்துறை வான்அடி யார்க்கடை யாவினையே. பொழிப்புரை :பூங்கொம்பு தனக்கு இணையாகாவாறு அலையச் செய்து அதனழகினையும் தான் பெற்ற நுண்ணிய இடையையும் , அழகும் ஒளியும் உடைய திங்கள் போலும் முகத்தில் இரண்டு அம்புகளை வருத்தி ஒப்பாகீர் என்றொதுக்கிய திருக் கண்களையும் உடைய சிவகாமியம்மையார் கொங்கைகளை விரும்பிய வார்சடையான் , ( நடராசப் பெருமான் ), அரகர முழக்கஞ் செய்து விழுந்தெழுந்து அன்பர்கள் அன்புடன் வழிபடும் காளையைப் போன்ற உடற் கட்டினர் . பேரார்வத்தோடு திருக்கழலணிந்த சிவந்த திருவடிகளைக் கைகளால் தொழ , பொன்னம்பலத்தில் திருக்கூத்தாடும் முழு முதல்வன் அடியவர்க்கு வினைத் தொடர்பு இல்லை . குறிப்புரை :` கொம்பு .. முலை ` என்றது கங்கையைக் குறித்தலுமாம் . ஆயினும் , அஃது அத்துணைச் சிறப்பினதன்று . காளையர் என்பது வழிபடுவோருள் அத்தகையாரைக் குறித்ததெனலும் பொருந்தும் . காளையர்க்கு முன்னும் பின்னும் உள்ள அடைமொழியால் முறையே பெருமானது திருமேனியிற் கொண்ட ஆர்வமும் திருவடிக்கண் நின்ற வேட்கையும் விளங்கும் . கொம்பு - பூங்கொம்பை . அலைத்து ( நமக்கு இத்தகைய அழகே இல்லையென வருந்த ) வருத்தி , அழகு எய்திய - அழகைப்பெற்ற . நுண் இடை - சிறிய இடை , கோலம் - அழகிய , வாள் . ஒளி பொருந்திய முகத்து - முகத்தில் , அம்பு அலைத்த - அம்புகளை , ( அவ்வாறே ) வருத்திய . இரண்டு கண்ணாள் - இரு விழிகளையுடைய உமாதேவியாரின் , வார்சடை - நெடிய சடாபாரம் . கம்பலைத்து - முக்காரம் செய்து , காமுறு - ( கண்டார் ) விரும்பும் , காளையர் - ஏறுபோற் பீடுநடையையுடைய தில்லைவாழ் அந்தணர் மக்கள் , காதலால் - அன்போடு , கழல் சேவடி கை தொழ - கழலையணிந்த சிவந்த திருவடிகளைத் தொழ . அடையாவினை - துன்பங்கள் அடையமாட்டா . இறைவனைப் போற்றும் வீறுடைமையால் பெருமித நடைக்குக் காளை உவமம் . ` ஏறுபோற் பீடு நடை ` என்றார் வள்ளுவரும் . ( திருக்குறள் 59) தில்லைவாழந்தணர்களின் , துதித்தல் , பாடுதல் , புகழ் பாராட்டுதல் ஆகிய செயல்களின் ஓசைக்கு , முக்காரம் செய்தல் ஆகிய உவமையும் பெறப்படும் . ஏற்றின் ஒலி முக்காரம் எனப்படும் . கம்பலைத்து - கம்பலை யென்னும் பெயரடியாகப் பிறந்த வினையெச்சம் . கம்பலை - ஓசை . ` கம்பலை சும்மை , கலியே , அழுங்கல் என்றிவை நான்கும் அரவப்பொருள ` ( தொல் . சொல் . உரி . 53) காதலான் : ஆனுருபு ஒடுப்பொருளில் வந்தது . ` தூங்குகையான் ஓங்குநடைய ` என்புழிப்போல . ( புறம் .22. ) பாடல் எண் : 5தொல்லை யார்அமு துண்ணநஞ் சுண்டதோர் தூம ணிமிட றாபகு வாயதோர் பல்லை யார்தலை யிற்பலி ஏற்றுழல் பண்டரங்கா தில்லை யார்தொழு தேத்துசிற் றம்பலம் சேர்த லால்கழற் சேவடி கைதொழ இல்லை யாம்வினை தான்எரி யம்மதில் எய்தவனே. பொழிப்புரை :திரிபுரத்தை எரித்தொழிக்க மலை வில்லால் தீக்கணையை எய்தவனே , பழந் தேவர் எல்லாரும் அமுதுண்ண வேண்டிக் கருணைப் பெருக்கால் , நஞ்சினை உண்டதொரு தூய நீல மணி போலக் கறுத்த திருக்கழுத்தினனே ! பற்கள் நிறைந்த பிளந்த வாயுடையதொரு தலையில் பலியை ஏற்று உழலும் பாண்டரங்கக் கூத்தனே ! தில்லைவாழந்தணர் வணங்கி ஏத்தும் திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்து வழிபடுதலாலும் கழலணிந்த சேவடியைக் கைகளால் தொழுதலாலும் இருவினையும் பற்றறக் கழியும் . குறிப்புரை :தொல்லையார் - தொன்மையுடைய தேவர்கள் , தூ - தூய ,( கலப்பில்லாத ) மணி - நீல ரத்தினம் போன்ற . மிடறா - கண்டத்தையுடையவனே ! பகுவாய் - பிளந்த வாய் . தலை - மண்டையோடு . பண்டரங்கம் - பாண்டரங்கக் கூத்து எனவும் , ` மதில் எரிய எய்தவனே ` எனவும் ( உன் ) சேவடி கைதொழ வினை இல்லையாம் எனவும் கூட்டுக . திரிபுரதகனம் செய்த மகிழ்ச்சியால் தேரே மேடையாக நின்று சிவபெருமான் ஆடிய கூத்தைப் ` பாண்டரங்கம் ` என்பர் . அது ` திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் தேரே யரங்கமாக ஆடிய கூத்தே பாண்டரங்கமே ` என்பதால் அறிக . பாடல் எண் : 6ஆகந் தோய்அணி கொன்றை யாய்அனல் அங்கை யாய்அம ரர்க்கம ராவுமை பாகந் தோய்பக வாபலி யேற்றுழல் பண்டரங்கா மாகந் தோய்பொழில் மல்குசிற் றம்பலம் மன்னி னாய்மழு வாளி னாய்அழல் நாகந் தோய்அரை யாய்அடி யாரைநண் ணாவினையே. பொழிப்புரை :திருமேனியில் தோய்ந்த அழகிய கொன்றை மாலையை யுடையவனே ! தீ ஏந்திய திருக்கையனே ! தேவ தேவனே ! அம்பிகை பாகமுடைய பகவனே ! பலி ஏற்றுத் திரியும் பாண்டரங்கக் கூத்தனே ! வானளாவிய சோலைகள் நிறைந்த திருச்சிற்றம்பலத்தே நிலைபெற்றவனே ! மழுவாளை ஏந்தியவனே ! நச்சுத் தீயையுடைய அரவக் கச்சணிந்த திருவரையினனே ! உன் அடியவரை வினைகள் அடையா . ( ஆதலின் , உனக்கு அடிமை பூண்ட எமக்கும் வினை இல்லை என்றவாறு .) குறிப்புரை :ஆகம் - மார்பில் , தோய் அணிகொன்றையாய் - தோயும் அழகிய கொன்றை மாலையை யுடையவனே ! அனல் அங்கையாய் - உள்ளங்கையில் அனல் ஏந்தியவனே ! அமரர்க்கு அமரா - தேவ தேவனே ! ( அமரர் - தேவர் ; மரணம் இல்லாதவர் .) பகவா - பகவனே ! ஐசுவரியம் , வீரியம் , ஞானம் , புகழ் , திரு , வைராக்கியம் , என்னும் இவ்வாறு குணங்களையும் உடையவன் பகவன் . அது சிவபெருமானையன்றி , மற்றெவரையுங் குறிக்காது . மாகம்தோய் - ஆகாயத்தை அளாவிய . பொழில் - சோலை , மல்கு - வளம் நிறைந்த , அழல் நாகம் - விடத்தையுடைய பாம்பு . தோய் - சுற்றிய , அரையாய் - இடுப்பையுடையவனே ! ( அரை - அளவையாகு பெயர் ) உன் அடியவரை வினை நண்ணாதனவாகும் . பாடல் எண் : 7சாதி யார்பளிங் கின்னொடு வெள்ளிய சங்க வார்குழை யாய்திக ழப்படும் வேதி யாவிகிர் தாவிழ வாரணி தில்லைதன்னுள் ஆதி யாய்க்கிடம் ஆயசிற் றம்பலம் அங்கை யால்தொழ வல்லடி யார்களை வாதி யாதகலும்நலி யாமலி தீவினையே. பொழிப்புரை :நல்ல இனத்துப் பொருந்திய பளிங்கொடு வெண் சங்குகொண்டு செய்யப்பட்ட குண்டலத்தை உடையானே , விளங்குகின்ற மறையோனே , விகிர்தனே , திருவிழாக்கள் நிறைந்த அழகிய தில்லையுள் முதல்வனாகிய நினக்கு இடமான திருச்சிற்றம்பலத்தை அழகிய கைகளால் தொழவல்ல அடியார்களைத் தீவினைப் பெருக்கம் வாதிக்காது ; வருத்தா தொழியும் . குறிப்புரை :சாதியார் பளிங்கின் ஓடு - உயர்ந்த சாதிப்பளிங்கு போலும் , வார் - தொங்கும் , சங்கக்குழையாய் - சங்கினாலாகிய காதணியையுடையவனே . இன் - சாரியை , ஓடு ஒப்புப் பொருளில் வந்தது . ` ஈன்றாளோடு எண்ணக் கடவுளும் இல் ` என்புழிப்போல . திகழப்படும் வேதியா - வேதங்களில் விளங்க எடுத்துப் பேசப்படு பவனே . விகிர்தா - மாறானவனே . அம்கையால் - அழகிய கைகளால் . ` என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே ... வழிபடும் அதனாலே ` ( தி .2 ப .106 பா .1) யென்றபடி சிவபெருமானைக் கும்பிட ` எத்தனை கோடி யுகமோ தவம் செய்திருக்கின்றன ` என்று பாராட்டற்குரிய தன்மை பற்றிக் ` கைகளால் தொழ ` - என வேண்டாது கூறினார் , வணங்கத் தலைவைத்து வார்கழல் வாய் வாழ்த்த வைத்து என்பது போலக் கைபெற்றதன் பயன் அவனைக் கும்பிடற்கே யெனல் தோற்றுவித்தற்கு . அதனை , ` கரம் தரும் பயன் இது என உணர்ந்து ... பெருகியதன்றே ` என்னும் ( திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம் 61) சேக்கிழார் பெருமான் திருவாக்கானும் உணர்க . மலி - மிக்க . நலியா - துன்புறுத்தாதன ஆகி , வாதியாது - எதிரிட்டு நில்லாமல் , அகலும் - நீங்கும் . ` வாதியா வினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்தடையாவே `( தி .2 ப .106 பா .11) என்ற இடத்தும் ( வாதியாது - பாதியாது ) இப்பொருளில் வருதல் காண்க . வல்ல - குறிப்புப் பெயரெச்சத்தின் ஈறு தொக்கது . பாடல் எண் : 8வேயி னார்பணைத் தோளியொ டாடலை வேண்டி னாய்விகிர் தாஉயிர் கட்கமு தாயி னாய்இடு காட்டெரி யாடல்அ மர்ந்தவனே தீயி னார்கணை யால்புரம் மூன்றெய்த செம்மை யாய்திகழ் கின்றசிற் றம்பலம் மேயி னாய்கழ லேதொழு தெய்துதும் மேலுலகே. பொழிப்புரை :மூங்கிலைப் போன்ற பருத்த தோளுடைய காளியொடு திருக்கூத்தாடுதலை விரும்பினவனே , விகிர்தனே , வணங்கிய உயிர்கட்கு அருளமுதமாகியவனே , இடுகாட்டின் தீயில் ஆடுதலை விரும்பியவனே , தீக்கடவுளைக் கூரிய முனையாக் கொண்ட திருமாலாகிய கணையால் திரிபுரத்தை எய்த செம்மையனே , திருவருளாகி விளங்குகின்ற திருச்சிற்றம்பலத்தைத் திருநடங் கொள்ளும் இடமாக விரும்பியவனே , நின் கழலடிகளையே தொழுது சிவலோகத்தை அடைவோம் . குறிப்புரை :வேயின் - மூங்கில் போல . ஆர் - பொருந்திய பணைத் தோளியோடு - திரட்சியாகிய தோளையுடையவளாகிய காளியுடன் , ஆடலை வேண்டினாய் - ஆடுதலை விரும்பியவனே ! ( தோள் + இ ; இகரம் பெண்பால் விகுதி ) உண்ண இனித்து மரணத்தை யொழிக்கும் அமிர்தம்போல் ` சிறந்தடியார் சிந்தனையுள் தேன் ஊறிநின்று பிறந்த பிறப்பு அறுக்கும் பெருமான் ஆனவனே !` தீயின் ஆர்கணையால் - தீயாகிய அம்பினால் , திரிபுரம் எரித்த அம்பின் நுனிப் பாகம் தீயாயிருந்தமையால் , தீயினார் கணை எனப்பட்டது . அம்பின் அடிப்பாகம் காற்று ; நுனி தீ ; அம்பு திருமால் என்பவற்றை , ` கல்லானிழற் கீழாய்இடர் காவாயென வானோர் எல்லாம்ஒரு தேராய்அயன் மறைபூட்டிநின் றுய்ப்ப வல்லாய்எரி , காற்று , ஈர்க்கு , அரி , கோல் , வாசுகி , நாண்கல் , வில்லால்எயில் எய்தானிடம் வீழிம்மிழ லையே ` ( தி .1 ப .11 பா .6) என்னும் இடத்தில் காண்க . மேயினாய் - மேவினாய் . கழலே - திருவடிகளையே , எய்துதும் - அடைவோம் . பாடல் எண் : 9தாரி னார்விரி கொன்றை யாய்மதி தாங்கு நீள்சடை யாய்தலை வாநல்ல தேரி னார்மறு கின்திரு வாரணி தில்லைதன்னுள் சீரி னால்வழி பாடொழி யாததோர் செம்மை யால்அழ காயசிற் றம்பலம் ஏரி னால்அமர்ந் தாய்உன சீரடி யேத்துதுமே. பொழிப்புரை :மலர்ந்த கொன்றைப் பூமாலையைச் சூடியவனே , பிறையைத் தாங்கும் நீண்ட சடையவனே , தலைவனே , அழகிய தேர்களாலே பொலிவு நிறையப்பெற்ற திருவீதிகளையுடைய செல்வம் நிறைந்த திருத் தில்லையுள் , சிறந்த நூல் முறைப்படி வழிபடுதலை ஒழியாததொரு செம்மையால் அழகான திருச்சிற்றம்பலத்தைத் திருக் கூத்தெழுச்சியால் விரும்பினவனே , உன் சீரடிகளை ஏத்துவேம் . ஒழியாத வழிபாடு இன்றும் உண்டு . குறிப்புரை :விரி - மலர்ந்த . மறுகு - வீதி . திரு - செல்வம் . அணி - அழகிய . சீரினால் - சிறந்த நூன்முறைப்படி . வழிபாடு - நித்திய நைமித்திகமாகிய பூசை . ஒழியாதது - ஒரு காலமும் நீங்காததாகிய . செம்மை - செந்நெறி . உன - உன்னுடைய . சீர் அடி - சிறந்த அடிகளை , ஏத்துதும் - துதிப்போம் . தேரின் ஆர் மறுகு - ` தேருலாவிய தில்லையுட் கூத்தனை ` எனத் திருநாவுக்கரசு நாயனாரும் அருளுவர் . தலமோ ` அணிதில்லை ` கோயிலோ ` அழகாய சிற்றம்பலம் `, அங்கு அமர்ந்த பெருமானோ ` ஏரினாலமர்ந்தான் ` இவ்வழகிய கூத்தப் பெருமானது பேரழகில் திளைத்த எமது வாகீசப் பெருந்தகையார் , ` கச்சின் அழகு கண்டாற் பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே ,` ` சிற்றம்பலத்து அரன் ஆடல் கண்டாற் பின்னைக் காண்பதென்னே ,` என்பன முதலாக அருளினமையும் காண்க . ( தி .4 ப .80 முழுவதும் .) பாடல் எண் : 10வெற்ற ரையுழல் வார்துவர் ஆடைய வேடத் தாரவர் கள்உரை கொள்ளன்மின் மற்ற வருல கின்னவ லம்மவை மாற்றகில்லார் கற்ற வர்தொழு தேத்துசிற் றம்பலம் காத லால்கழற் சேவடி கைதொழ உற்ற வர்உல கின்உறு திகொள வல்லவரே. பொழிப்புரை :ஆடையில்லாத அரையினராய்த் திரிவாராகிய சமணருரைகளையும் துவரூட்டிய ஆடையால் கொள்ளும் வேடத்தவராகிய தேரருரைகளையும் ஒரு பொருளுரையாகக் கொள்ளாதீர்கள் . அவர்கள் உலகத்து அவலங்களை மாற்ற வல்லாரல்லர் . சிவாகமங்களைக் கற்று நாற்பாதங்களையும் வல்ல சைவர் தொழுது ஏத்தும் திருச்சிற்றம்பலத்தைக் கண்ட ஆராத காதலால் , கழலணிந்த சேவடிகளைக் கைகளால் தொழ உற்றவரே உயிர்க்கு உலகினால் உள்ள உறுதி ( ஆன்ம லாபம் ) கொள்ள வல்லவராவர் . குறிப்புரை :வெற்றரையர் ( வெறு + அரையர் ) ஆடையணியாத இடுப்பினர் , சமணர் . துவர் ஆடையர் - மருதம் துவர் தோய்ந்த ( காவி ) ஆடையை யுடையவர் , புத்தர் . ( ஆகிய ) அவர்கள் உரை ( யைக் ) கொள்ளன் மின் - கேளாதீர்கள் . அவர் , உலகின் அவலம் - உலகிற் பிறந்திறந்து உழல்வதாகிய துன்பத்தை , மாற்றகில்லார் - போக்கும் வலியற்றவர் . ( ஆதலின் அவற்றை விடுத்து ) கற்றவர் தொழுது ஏத்து சிற்றம்பலத்தில் , காதலால் - அன்போடு , கழல்சேஅடி - கழலை யணிந்ததால் சிவந்த குஞ்சித பாதத்தை . கைதொழ உற்றவர் - கையால் தொழுதல் உறுவோர் , உலகின் உறுதி கொள வல்லார் - உலகில் மானிடப் பிறவியிற் பிறந்த பயனை அடைய வல்லவர் ஆவர் . அது ` மானுடப் பிறவிதானும் வகுத்தது மனவாக்காயம் ஆனிடத் தைந்தும் ஆடு அரன் பணிக்காகவன்றோ ` என்றது ( சித்தியார் . சுபக்கம் 92) ` ஆக்கையாற் பயனென் அரன்கோயில் வலம் வந்து பூக்கையால் அட்டிப்போற்றி யென்னாத இவ்வாக்கையால் பயனென் `. ( தி .4 ப .9 பா .8) பாடல் எண் : 11நாறு பூம்பொழில் நண்ணிய காழியுள் நான்ம றைவல்ல ஞானசம் பந்தன் ஊறும் இன்தமி ழால்உயர்ந் தார்உறை தில்லைதன்னுள் ஏறு தொல்புகழ் ஏந்துசிற் றம்பலத் தீச னைஇசை யாற்சொன்ன பத்திவை கூறு மாறுவல் லார்உயர்ந் தாரொடும் கூடுவரே. பொழிப்புரை :மணம் நாறும் பூஞ்சோலைகள் பொருந்திய சீகாழியுள் நான்கு மறைகளிலும் வல்ல திருஞானசம்பந்தர் ஊறும் இனிய தமிழால் சொன்னவையும் , வேத சிவாகமங்களை யுணர்ந்த அந்தணர் மூவாயிரவர் வாழும் தில்லையுள் மேன்மேல் ஏறும் தொன்மைப் புகழ் தாங்கும் திருச்சிற்றம்பலம் உடையானைப் பண்ணிசையால் சொன்னவையும் ஆகிய இத்திருப்பதிகத்தை இசையுடன் பாடுமாறு வல்லவர் தேவரொடுங் கூடி இன்பம் அடைவர் . ( தி .3 ப .6 பா .11; தி .3 ப .31 பா .11; தி .3 ப .52 பா .11.) குறிப்புரை :நாறுபூம்பொழில் நண்ணிய காழி - மணக்கும் பூக்களையுடைய சோலை பொருந்திய காழியுள் ` ஞானசம்பந்தன் ` ஊறும் இன் தமிழால் - இனிமை ஊறும் தமிழால் , ஏறு தொல் புகழ் ஏந்து - பழமையான மிக்க புகழைத் தாங்கிய . சிற்றம்பலத்து ஈசனைச் சொன்ன இவை வல்லார் உயர்ந்தாரொடும் கூடுவர் - உயர்ந்த சிவனடியாரோடுங் கூடும் பேறு பெறுவர் . அடியாரொடு கூடி வணங்குவோர் உள்ளத்தில் இறைவன் உமாதேவியாரோடும் எழுந்தருள்வானாதலால் இங்ஙனம் கூறியருளினார் . ` அடியேன் உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய் ` என்ற திருவாசகத்தும் காண்க . பூம்பொழில் நண்ணிய காழியுள் நான்மறைவல்ல ஞானசம்பந்தன் உயர்ந்தார் உறை தில்லையுள் , புகழ் ஏந்து சிற்றம்பலத்து ஈசனை , ஊறும் இன்தமிழால் , இசையாற் சொன்ன இவை பத்து ( ம் ) கூறுமாறு வல்லார் உயர்ந்தாரொடும் கூடுவர் என்க . கோயில் முதல் திருப்பதிகத்தின் 8ஆம் பாடலில் இராவணனையும் 9ஆம் பாடலில் பிரம விட்டுணுக்களையும் குறிக்கவில்லை . நன்றி : http://www.thevaaram.org/ |
Tuesday, November 30, 2010
பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்... (திருமுறை 1 & 2)
திருமுறை 1
திருமுறை 2
பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்
திருப்பிரமபுரம்பாடல் எண் : 1தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக் காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன் ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பொழிப்புரை :தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ! குறிப்புரை :தோடுடையசெவியன் என்பது முதலாக உள்ளங்கவர்ந்தகள்வனுடைய சிறப்பியல்புகள் தெரிவிக்கப்பெறுகின்றன. பிள்ளையாருடைய அழுகைக் குரல் சென்று பரந்து திருமுலைப்பால் அருளச் செய்தது திருச்செவியாதலின் அதனை முதற்கண் தெரிவிக்கிறார். உலகுயிர்கள் துன்பம் நீங்கி இன்பம் அடைதலே பொருளாக, பாடல் பரமனார் திருச்செவியில் சென்று சேர, திருச்செவியை முதற்கண் சிறப்பித்தார் என்பது, `பல்லுயிரும் களிகூரத் தம் பாடல் பரமர்பால் செல்லுமுறை பெறுவதற்குத் திருச்செவியைச் சிறப்பித்து` என்ற சேக்கிழார் வாக்கால் தெரியலாகும். தோடுடையசெவி என்றதால் இடப்பாகத்துச் செவி என்பது குறிக்கப்பெறுகின்றது. கருணைக்கேற்றது, தாய்தழீஇய இடப்பக்கமாதலின், அதனை முற்கூறினார். `தோடு கூற்று பித்தா மூன்றும் பீடுடைத்தேசிகன் பேரருள் ஆகும்` என்பதால் இது ஞானதேசிகனது திருவருட்டிறத்தை விளக்குவதாகும். சொரூபசிவம் மூவகை ஆன்மாக்களுக்கும் மூவகையால் அநுக்கிரகித்து மும்மலங்களையும் போக்கி அருளாரமுதத்தை உண்பித்தருளும் முறையில், சகலான்மாக்களுக்குப் படர்க்கையில் தோன்றிப்புரியும் குருவருளைக் குறிப்பதாகுமென்று `குரு அருளும்` (அகத்தியர் தேவாரத் திரட்டு) என்ற பாடலும் குறிக்கிறது./n மூன்றுவயதுக் குழந்தையாகிய ஞானசம்பந்தப்பிள்ளையார் தீவிரதர அன்புகொண்டு சன்மார்க்க நெறியாகிய நாயக நாயகித் தன்மையில் எடுத்த எடுப்பிலேயே ஈடுபடுகின்றார். உமையொருபாகனாக ஒரு பெண்ணோடு இருந்த பயில்வால் என்னுள்ளங்கவர்கின்றார் என நயந்தோன்றக் கூறியவாறு. விடையேறி-தாம் கண்ட காட்சி இடபாரூடராதலின் அதனைக் குறித்தபடி. தூவெண்மதி-தூய்மையான வெண்ணிறம் பொருந்திய மதி. மதிக்குத் தூய்மை களங்கமின்மை, இருள் ஒளியைச் சாராதவாறு போலக் களங்கம் இறைவனையும், அவனருள் பெற்றாரையும் சாராது. தூய்மை மனத்திலும் வெண்மை புறத்திலும் நிகழ்வது ஆதலின், இங்கே குறிப்பிடும் மதி நாம் காணும் சந்திரன் போன்று பிராகிருத சந்திரன் அல்லன் என்பது தெளியத்தக்கது. அன்றியும் ஒரு கலைப் பிறையாதலின் களங்கத்திற்கு இடமில்லை என்பதுமாம். இறைவன் சுடலைப் பொடி பூசுதல்: சர்வசங்கார காலத்து எல்லாவுலகமும் தத்தங் காரணத்துள் முறையே ஒடுங்க-காரணங்கள் யாவும் இறுதியாக இறைவனிடம் ஒடுக்கப் பெறும்போது நிகழ்வது. மகாசங்காரமாவது, நிவர்த்தியாதி பஞ்ச கலைகளிலும் அடங்கிய எல்லாப் புவனங்களையும் சங்கரிக்கின்ற நிலை. அப்போதுதான் எல்லாம் சுடலைக் காடாகும்./n உள்ளங்கவர்தலாவது அவனையன்றி உளங்கள் அறியாவாறு ஆட்கொள்ளுதல். ஏடு-இதழ். மலரான்-பிரமன். பிரமன் வழிபாடு செய்த தலமாதலின் இறைவற்குப் பிரமபுரீசர் என்பதும் தலத்திற்குப் பிரமபுரம் என்பதும் பெயராயிற்று. பிரமாபுரம் எனவே பிரமன் வழிபட்ட தலம் என்பது விளங்குதலின் மலரான் என்பது பிரமனைக் குறியாது என்றும், இந்நாயனாரே முற்காலத்து ஏடுடைய மலரால் பூசித்த காரணம் பற்றி இங்ஙனம் கூறினார் என்றும் சதாசிவச் செட்டியாரவர்கள் கருதினார்கள். பீடு-பெருமை. மேவிய-தாமே விரும்பி எழுந்தருளியுள்ள. இறைவன் நித்யசுதந்திரன் ஆதலின் இங்ஙனம் கூறப் பெற்றது. பெம்மான்-பெருமான் என்பதன் திரிபு. கள்வன் பெருமானாகிய இவன் அன்றே எனக் கூட்டுக. ஏறி, பூசி என்பன பெயர்ச்சொற்கள். வினையெச்சமாக்கி, கவர்கள்வன் என்ற வினைத்தொகையின் நிலைமொழியோடு முடிப்பாரும் உண்டு./n இத் திருப்பாடலுக்கு உரை எழுதிய கயப்பாக்கம் திரு.சதாசிவச்செட்டியார் அவர்கள் `விடையேறி` என்பது நித்யத் தன்மையை வேண்டிய அறக்கடவுளை வெள்விடையாகப் படைத்து ஊர்தியாகக் கொண்டதால் சிருஷ்டியும், `மதிசூடி` என்பது சந்திரனுக்கு அபயம் தந்து திருமுடியில் ஏற்றிக் காத்ததால் திதியும், `பொடிபூசி` என்பது சர்வசங்காரகாலத்து நிகழ்ச்சியை அறிவித்தலால் சங்காரமும், `கள்வன்` என்பது இறைவன் எல்லா உயிர்களிடத்தும் நீக்கமற நிறைந்திருந்தும் அவைகள் வினைப்போகங்களை நுகர ஒளித்து நிற்பதால் திரோபவமும், `அருள்செய்த` என்பது அனைவருக்கும் அருள் செய்யும் அநுக்கிரகமும் ஆகிய ஐந்தொழிலையும் விளக்கும் குறிப்பு என்பார்கள்./n ஸ்ரீமத் செப்பறைச் சுவாமிகள் அவர்கள், `தோடுடைய செவியன்` முதலாயின இறைவனது எண்குணங்களாகிய சிறப்பு இயல்புகளை உணர்த்துவன என்றும், `பிரமாபுரம்` `விடையேறி` முதலியன இறைவனது தசாங்கங்களைக் குறிப்பால் உணர்த்தி நிற்பன என்றும், `விடையேறி` `பொடிபூசி` `உள்ளங்கவர்கள்வன்` என்பன முறையே இறைவனுடைய மூன்று திருமேனிகளாகிய உருவம் அருஉருவம் அருவம் என்ற மூன்றையும் குறித்து நிற்பன என்றும், எழுதியுள்ளார்கள். சேக்கிழார் சுவாமிகள் `மறைமுதல் மெய்யுடன் எடுத்த எழுதுமறை` என்பதால் பிரணவத்தின் முதலாகிய ஓங்காரத்தைச் சிவசக்தியின் உண்மைச்சொரூபமாகிய தகரவித்தையின் அடையாளமாகிய `த்` என்பதோடு சேர்த்து `தோ` என்று தொடங்கியதாகக் குறிப்பிடுவார்கள். பன்னிரண்டாம் திருமுறையில் `உலகெலாம்` என்று முடிவதனையும் இதனோடு சேர்த்துத் திருமுறை முழுவதுமே வேத மூலமாகிய பிரணவத்துள் அடங்கியது என்பது குறிப்பு./n தேவாரத்திற்கும் வேதத்திற்கும் உள்ள ஒற்றுமையை உணர்த்த, வேதம் பயின்ற மரபில் வந்து தமிழ்வேதம் தந்த இவர்கள், தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோ தயாத் என்ற காயத்திரி மந்திரத்தின் முதலெழுத்தாகிய தகரத்தின் மீது பிரணவத்தின் முதலெழுத்தாகிய ஓகாரத்தைச் சேர்த்துத் தொடங்கியிருப்பது அறிந்து இன்புறற்குரியது. குருவருள்: `தோடுடைய செவியன்` என்றமையால் அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்பதை முதலில் உணர்த்தி, அதனால் ஒருதெய்வ வழிபாட்டை நிலைநிறுத்துகிறார் ஞானசம்பந்தர். தோடுடைய செவியே `ஓம்` என்ற பிரணவ சொரூபமாய் உள்ளதையும் காட்டி அருளுகிறார்./n `ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரமாபுரம்` என்பது பிரமன் பூசித்தமைக்கு இரங்கிய பெருமான் அருள் செய்ததையே குறிக்கும். இதை வலியுறுத்துவார் போன்று `சேவுயரும் திண்கொடியான் திருவடியே சரண் என்று சிறந்த அன்பால் நாவியலும் மங்கையொடு நான்முகன்தான் வழிபட்ட நலங்கொள் கோயில்` எனப் பிள்ளையார் மேகராகக் குறிஞ்சிப் பண் பாடலிலும் விளக்கியுள்ளார். இதனால் `ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த` என்பது ஞானசம்பந்தர் ஏடுடைய மலரால் தான் வழிபட்டு அருள்பெற்றதாகக் கூறல் முறையாகாது என்பதை உணரலாம். பாடல் எண் : 2முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவைபூண்டு வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன் கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால் தொழுதேத்தப் பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பொழிப்புரை :வயது முதிர்ந்த ஆமையினது ஓட்டினையும், இளமையான நாகத்தையும், பன்றியினது முளை போன்ற பல்லையும் கோத்து மாலையாக அணிந்து, தசைவற்றிய பிரமகபாலத்தில் உண்பொருள் கேட்டு வந்து என் உள்ளம் கவர்ந்தகள்வன், கல்வி கேள்விகளிற் சிறந்த பெரியோர்கள் தன் திருவடிகளைக் கைகளால் தொழுது ஏத்த அவர்கட்கு அருளும் நிலையில் விடைமீது காட்சி வழங்கும் பிரமபுரத்தில் விளங்கும் பெருமானாகிய இவனல்லனோ! குறிப்புரை :இதனால் இறைவன் அணிகளைக் கொண்டு அடையாளங்கள் அறிவிக்கப் பெறுகின்றன. முற்றல் ஆமை - ஆதி கமடமாதலின் வயது முதிர்ந்த ஆமை. ஆமை என்றது ஈண்டு அதன் ஓட்டினை. இளநாகம் என்றது இறைவன் திருமேனியையிடமாகக் கொண்ட பாம்பிற்கு நரை திரையில்லையாதலின் என்றும் இளமையழியாதநாகம் என்பதைக் குறிப்பிக்க./n ஏனம் - பன்றி; ஆதிவராகம். வற்றல் ஓடு - சதைவற்றிய மண்டையோடு. கலன் - பிச்சையேற்கும் பாத்திரம். பலி - பிச்சை, பெரியார்க்கிலக்கணம் கற்றலும் கேட்டலுமே என்பது. கற்றல் - உலக நூல்களை ஓதித் தருக்குவதன்று, இறைவன் புகழையே கற்று அடங்கல். கேட்டலும் அங்ஙனமே. இறைவன் புகழையன்றி வேறொன்றையுங்கல்லாத - கேளாத பெரியோர்களாலேயே இறைவன் தொழற்குரியன் என அதிகாரிகளையறிவித்தவாறு. `கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன்` `கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியை` என்பன ஒப்புநோக்கற்குரியன. `கற்றல் கேட்டலுடையார் பெரியார்` எனவே, உபலக்கணத்தால் சிந்தித்தல் தெளிதல் நிட்டைகூடல் முதலியனவும் கொள்ளப்பெறும். `கேட்டலுடன் சிந்தித்தல் தெளிதல் நிட்டை, கிளத்தல் என ஈரிரண்டாம் கிளக்கின் ஞானம்` என்பது சிவஞானசித்தியார். தமக்கு அருள் செய்தவண்ணமே தொழுதேத்தும் பெரியோர்க்கெல்லாம் அருள் வழங்கப் பெருமான் இடபத்தை ஊர்ந்தே இருக்கிறார் என்பதாம். பெற்றம் - இடபம். பாடல் எண் : 3நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதிசூடி ஏர்பரந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன் ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிதுவென்னப் பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பொழிப்புரை :கங்கை நீர் நிரம்பி நிமிர்ந்த சிவந்த சடைமுடி மீது ஒரு கலையை உடைய நிலவைப் பொழியும் வெள்ளிய பிறைமதியைச் சூடி வந்து விரகமூட்டிக் கைகளில் அணிந்துள்ள ஓரினமான சங்கு வளையல்கள் கழன்று விழுமாறு செய்து, என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், மகாப்பிரளய காலத்தில் ஊர்கள் மிக்க இவ்வுலகில் அழியாது நிலை பெற்ற ஒப்பற்ற ஊர் இஃது என்ற புகழைப்பெற்ற பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவனல்லனோ! குறிப்புரை :நீர் - கங்கை, நிமிர்புன்சடை - நிறைந்த புல்லிய சடை, ஓர் நிலா வெண்மதி - ஒரு கலைப்பிறை, ஏர் - அழகு. வெள்வளை - சங்குவளை. சோர - நழுவ, அவன் மதியைச் சூடியிருத்தலின் விரகமிக்கு உடலிளைத்து வளைசோர்ந்தது என்பதாம். ஊர் பரந்த உலகு - ஊர்கள் மிகுந்த உலகு. மகாப்பிரளய காலத்து உலகமே அழிக்கப் பெற்றபோது, இத்தலம் மட்டும் அழியாது இருத்தலின் உலகிற்கே ஒருவித்தாக இருக்கின்றது சீகாழி என்பது. பேர் - புகழ். பாடல் எண் : 4விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலையோட்டில் உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர்கள்வன் மண்மகிழ்ந்தவர வம்மலர்க்கொன்றை மலிந்தவரைமார்பில் பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பொழிப்புரை :வானவெளியில் மகிழ்ச்சிச் செருக்கோடு பறந்து திரிந்த மும்மதில்களையும் கணையொன்றினால் எய்து அழித்ததுமல்லாமல், விளங்கிய பிரமகபாலமாகிய தலையோட்டில் மனமகிழ்வோடு பலியேற்க வந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன் புற்றிடையே வாழும் பாம்பு, கொன்றை மலர் ஆகியவற்றால் நிறைந்த வரை போன்ற மார்பின் இடப்பாகத்தே உமையம்மையை மகிழ்வுடன் கொண்டருளியவனாய்ப் பிரமபுரத்தில் எழுந்தருளிய பெருமானாகிய இவன் அல்லனோ! குறிப்புரை :விண்மகிழ்ந்தமதில் - ஆகாயத்தில் பறத்தலை விரும்பிய மதில். இவை திரிபுராரிகளின் பொன், வெள்ளி, இரும்பாலான கோட்டை. எய்தது - மேருவை வில்லாக்கி, வாசுகியை நாணாக்கித்துளைத்தது. உள்மகிழ்ந்து - மனமகிழ்ந்து, தேரிய - ஆராய, செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். மண் மகிழ்ந்த அரவம் - புற்றினை விரும்பும் பாம்பு, இறைவன் அணிந்த பாம்பு புற்றில் வாழாததாயினும் சாதி பற்றிக் கூறப்பட்டது. அரவம் கொன்றை மலிந்த மார்பு-அச்சுறுத்தும் விஷம் பொருந்தியபாம்பையும், மணமும் மென்மையும் உடைய கொன்றையையும் அணிந்த மார்பு, என்றது வேண்டுதல் வேண்டாமையைக் காட்டும் குறிப்பாகும். பெண் - உமாதேவியார். பலிதேரவந்தார் எனதுள்ளம் கவர்ந்தார் என்றது என்னுடைய பரிபாகம் இருந்தபடியை அறிந்து ஒன்று செய்வார் போல வந்து உள்ளமாகிய ஆன்மாவை மலமகற்றித் தமதாக்கினார் என்பதை விளக்கியவாறு. பாடல் எண் : 5ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்மிவனென்ன அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர்கள்வன் கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததொர் காலம்மிதுவென்னப் பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பொழிப்புரை :ஒரு திருமேனியிலேயே உமையம்மைக்கு இடப்பாகத்தை அளித்தவன் என்றும், சடை முடியை உடையவன் என்றும், விடையை ஊர்ந்து வருபவன் என்றும் அவனது அழகைத் தோழியர் கூற அவ்வுரைப்படியே வந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், சர்வசங்கார காலத்தில் கரிய கடல் பொங்கி வந்து உலகைக்கொண்டபோது தோணிபுரமாய் மிதந்த பெருமை பெற்ற பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ. குறிப்புரை :ஒருமை - ஒரு திருமேனியிலேயே, பெண்மை உடையன் - பெண் உருவத்தை உடையன்; என்றதால் பெண்ணுருவும் ஆணுருவுமாகிய இருமையும் உடையன் என்பது குறித்தவாறு. பெண்மை - பெண்ணுரு. உடையன் என்றதிலுள்ள விகுதியால் ஆணுருவாயினும் பெண்மை உடைமையும், சிவம் உடையானும் ஆம் என்றவாறு. சடையன் - பெண்மையுருவில் பின்னிய சடையும் ஆணுருவில் அமைந்த சடையுமாயிருத்தலின் இரண்டிற்குமேற்பச்சடையன் என்றார். உரைசெய்ய - தோழியர் தலைவன் இயல்பைச் சொல்ல. உரையின் வாயிலாக உள்ளத்தில் புகுந்து விரும்பி உள்ளத்தைத் தமதாக்கிக்கொண்டான் என்பார் `அமர்ந்து எனது உள்ளம் கவர்கள்வன்` என்றார். `ஓர் காலம் கடல் கொள்ள மிதந்த தலம் இது என்னும் பெருமைபெற்ற பிரமபுரம்` என இயைத்துப்பொருள்காண்க. ஓர்காலம் - சர்வசங்கார காலம். பாடல் எண் : 6மறைகலந்தவொலி பாடலோடாடல ராகிமழுவேந்தி இறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன் கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர்சிந்தப் பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பொழிப்புரை :ஒலி வடிவினதான வேதத்தைப் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும், மழுவாயுதத்தைக் கையில் ஏந்திக்கொண்டும் வந்து எனது முன் கையில் உள்ள ஓரினமான வெள்ளிய வளையல்கள் கழன்று விழ என்னை மெலிவித்து உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், இருள்செறிந்த, மணமுடைய பொழில்களிடத்தும் நீண்டு வளர்ந்த மரங்களை உடைய சோலைகளிடத்தும் நிலவைப் பொழியும் பிறையைச் சூடியவனாய்ப் பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ! குறிப்புரை :பாடுவது வேதம், செய்வது கள்ளம் என்ற நிலையில் பெருமான் இருக்கின்றார் என்பதைக் காட்டுவன முன் இரண்டு அடி. ஒலி கலந்த மறை பாடலோடு எனக்கூட்டி ஒலிவடிவாய வேதத்தைப் பாடுதலை உடையவர் எனப் பொருள் காண்க./n மழு - தவறிழைத்தாரைத் தண்டித்தற்காக ஏந்திய சங்கார காரணமாகிய தீப்பிழம்பு; ஆயுதமுமாம். இறை - மணிக்கட்டு. வெள்வளை-சங்க வளையல்கள். முன்கையில் செறிந்து கலந்திருந்த சங்க வளையல்கள் சோர்ந்தன என்பதால், `உடம்புநனி சுருங்கல்` என்னும் மெய்ப்பாடு உணர்த்தியவாறு. கறை - இருள். கடி - மணம். பொழில் - நந்தனவனத்தும், சோலை - தானே வளர்ந்த சோலைகளிடத்தும். கதிர் சிந்த என்றதால் நிலவொளி அங்குமிங்குமாகச் சிதறியிருந்தமை அறியப்படும். கதிர் சிந்து அப்பிறை எனப்பிரிக்க. பாடல் எண் : 7சடைமுயங்குபுன லன்அனலன்னெரி வீசிச்சதிர்வெய்த உடைமுயங்குமர வோடுழிதந்தென துள்ளங்கவர்கள்வன் கடன்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிறகன்னம் பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பொழிப்புரை :சடையில் கலந்த கங்கையை உடையவனும், திருக்கரத்தில் அனலை உடையவனும், ஆடையின் மேல் இறுகக் கட்டிய பாம்பினனுமாய் எரிவீசி நடனமாடித்திரிந்து வந்து என் உள்ளம் கவர்ந்த கள்வன், கடலைத் தழுவிய உப்பங்கழிகளால் சூழப் பெற்றதும், குளிர்ந்த கடற்கரைச் சோலைகளையுடையதும், தம்முடைய பெடைகளை முயங்கித் திரியும் அழகிய சிறகுகளோடு கூடிய அன்னங்களை உடையதும், ஆகிய பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ! குறிப்புரை :சடைமுயங்கு புனலன் - சடையில் கலந்திருக்கின்ற கங்கையை உடையவன். அனலன்-திருக்கரத்தில் அனலை உடையவன், உடைமுயங்கும் அரவு - ஆடையின் மேல் இறுகக்கட்டிய கச்சையாகிய பாம்பு. சதிர்வு - பெருமை. உழிதந்து - திரிந்து. ஊடத்தக்க ஒரு பெண்ணையும், அஞ்சத்தக்க எரி அரவு முதலியவற்றையும் அணிந்து திரிபவராயிருந்தும் எனது உள்ளத்தைக் கவர்ந்தார் என்றது, அவர்க்குள்ள பேரழகின் திறத்தையும், கருணையையும், எல்லாவுயிரையும் பகை நீக்கியாளும் வன்மையையும் வியந்தவாறு. கழி - உப்பங்கழி. கானல் - கடற்கரைச் சோலை. பிரமபுரத்தில் சடைமுயங்கு புனலனாய் உள்ளம் கவர்கின்ற தன்மையால் போகியாயிருந்து உயிர்க்குப் போகத்தைப் புரிய, சிறகன்னங்களும் தத்தம் பெடைகளை முயங்குகின்றன எனல், `அவனன்றி ஓர் அணுவும் அசையாது` என்பதை அறிவித்தவாறு. பாடல் எண் : 8வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளைவித்த உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர்கள்வன் துயரிலங்கும்முல கிற்பலவூழிகள் தோன்றும்பொழுதெல்லாம் பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பொழிப்புரை :கயிலை மலையைப் பெயர்த்துத் தனது பெருவீரத்தை வெளிப்படுத்திய புகழால் உயர்ந்த இலங்கை மன்னன் இராவணனின் வியர்வை தோன்றும் மலை போன்ற தோள்களின் வலிமையை அழித்த எனது உள்ளம் கவர்கள்வன், துயர் விளங்கும் இவ்வுலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுதெல்லாம் அழியாது தன் பெயர் விளங்கும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ! குறிப்புரை :வியர் இலங்கு தோள் - வியர்வை விளங்குகின்ற தோள். வியர் அகலம் எனவும் பொருள் கொள்ளலாம். இலங்கை அரையன் - இராவணன். அரையன் தோள்களை வலிசெற்று என மாறிக்கூட்டுக. துயர் இலங்கும் உலகு - துன்பம் விளங்குகின்ற கன்மபூமி. இதனைத் துன்ப உலகு என்றது வினைவயத்தான் மாறித் துய்க்கப்படும் இன்ப துன்பங்களுள் இன்பக்களிப்பைக் காட்டிலும் துன்பக் கலக்கம் மிகுந்து தோன்றலின். பல ஊழி-பிரம ஊழி முதலிய பல ஊழிகள். இறைவன் பல ஊழிகளை விளைவிப்பது ஆன்மாக்களின் மலம் பரிபாக மாதற்பொருட்டு. பெயர் - புகழ். பாடல் எண் : 9தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரையானும் நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர்கள்வன் வாணுதல்செய்மக ளீர்முதலாகிய வையத்தவரேத்தப் பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பொழிப்புரை :திருமாலும், தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் நான்முகனும், தனது தாளையும் முடியையும் சிறிதே காணுதற் பொருட்டுப் பன்றியாயும் அன்னமாயும் தேடிச் செயலற, அண்ணா மலையாய் நிமிர்ந்தவனாய், என் உள்ளம் கவர்கள்வனாய் விளங்குபவன், ஒளி பொருந்திய நுதலையும் சிவந்த நிறத்தையும் உடைய மகளிர் முதலாக உலகோர் அனைவரும் துதிக்க விரும்புதலைச் செய்யும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ! குறிப்புரை :மாலொடு தண் தாமரையானும் தாள் நுதல் செய்து இறை காணிய நீணுதல் செய்து நிமிர்ந்தான் எனக் கூட்டுக. மால் தாள் காணிய நிமிர்ந்தான் எனவும், தாமரையான் நுதல் காணிய நிமிர்ந்தான் எனவும் தனித்தனிக் கூட்டிப் பொருள் காண்க. தாள் நுதல் செய்து - தாளையும் நுதலையும் தமது குறிக்கோளாகக் கருதி. இறை காணிய - தம்முள் யார் இறை என்பதைக் காணும் பொருட்டு; இறைவனைக் காணும் பொருட்டு என்பாரும் உளர். நீணுதல் - மால் பெரிய பன்றியாய் நீளுதலும் பிரமன் அன்னமாய் வானத்தில் நீளுதலுமாகிய இரண்டின் செயல்கள். ஒழிய - செயலற்றுப் போக. நிமிர்ந்தான் -அண்ணாமலையாய் உயர்ந்தவன். சென்று பற்றுவேன் என்று செருக்கிய தேவர்க்கு அப்பாற்பட்டவன், செயலழிந்திருந்த தலைவியின் சிந்தையை வலியவந்து கவர்கின்றான் என்பது இறைவனது எளிமை தோன்ற நின்றது. மகளிர் முதலாகிய வையத்தவர் ஏத்த மேவிய பெம்மான் என்றது இவளும் வையத்தவருள் ஒருத்தியாயிருக்க இங்ஙனம் கூறினாள், ஏனைய மகளிர்க்கு இல்லாததாகிய, இறைவனே வலியவந்து உள்ளங்கவரும்பேறு தனக்குக் கிட்டியமையைத் தெரிவிக்க. பாடல் எண் : 10புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறிநில்லா ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன் மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயம்மிதுவென்னப் பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பொழிப்புரை :புண்ணியம் இன்மையால் புத்தர்களும் அறிவற்ற சமணர்களும் சைவத்தைப் புறங்கூறச் சான்றோர் வகுத்த நெறியில் நில்லாது, தமக்கு ஏற்புடையவாகத் தோன்றிய பிழைபட்ட கருத்துக்களைச் சொல்லித்திரிய, உலகனைத்தும் சென்று பலி தேர்ந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், மதயானையை மருளுமாறு செய்து அதன் தோலை உரித்துப் போர்த்தது ஒரு மாயமான செயல் என்னுமாறு செய்து, பித்தனாய் விளங்கும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ! குறிப்புரை :பொறி இல் சமண் - அறிவற்ற சமணர்கள். புறங்கூற - நேர் நின்று சொல்லமாட்டாமையாலே மறைவான இடத்தில் எளிமையாய்ச் சொல்ல. நெறி நில்லா - வரம்பில் நில்லாதனவாக. ஒத்த சொல்ல - ஒரே கருத்தை உரைக்க. புறச்சமயத்தார் ஒருமித்துப் புறங்கூறவும் பிச்சையேற்று உள்ளங்கவர்கின்ற கள்வனாதலின் யானைத்தோலைப் போர்த்து மாயம் செய்தார் என்று இயைபில் பொருள் தோன்ற வைத்தார். பாடல் எண் : 11அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர்மேய பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன்றன்னை ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரைசெய்த திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளிதாமே. பொழிப்புரை :அருமையான நெறிகளை உலகிற்கு வழங்கும் வேதங்களில் வல்ல பிரமனால் படைக்கப்பட்டதும், அகன்ற மலர் வாவியில் தாமரைகளையுடையதும் ஆகிய பிரமபுரத்துள் மேவிய முத்தி நெறி சேர்க்கும் முதல்வனை, ஒருமைப்பாடு உடைய மனத்தைப் பிரியாதே பதித்து உணரும் ஞானசம்பந்தன் போற்றி உரைத்தருளிய திருநெறியாகிய அருநெறியை உடைய தமிழாம் இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்களின் பழவினைகள் தீர்தல் எளிதாகும். ஊழ்வினை தீர்வதற்குரிய மார்க்கங்கள் பல இருப்பினும், இத்திருப்பதிகத்தை ஓதுதலே எளிமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்புரை :அருநெறிய மறைவல்ல முனி - அருமையான நெறிகளை வகுக்கும் மறைகளில் வல்ல முனிவனாகிய பிரமன். அலர்மேய அகன் பொய்கை பிரமாபுரம் மேவிய பெருநெறிய பெம்மான் இவன்றன்னை - தாமரைகள் பொருந்திய அகன்ற பொய்கையை உடைய பிரமாபுரத்தில் விரும்பியிருந்த முத்திநெறி சேர்க்கும் முதல்வனை. ஒருநெறிய மனம் - ஒன்றுபட்ட மனம். மனம் ஐந்து வழியாகவும் அறிந்தவற்றை வழியடைத்தகாலத்தும் சென்று பற்றித் தன்மயமாயிருப்பதொன்றாகலின் அங்ஙனம் செல்லாது ஒருங்கிய மனத்தை ஈண்டு விதந்தார்கள். வைத்து - பிரியாதே பதித்து. திரு நெறியதமிழ் - சிவ நெறியாகிய அருநெறியையுடைய தமிழ். தொல் வினை - பழமையாகிய வினை; என்றது ஆகாமிய சஞ்சிதங்களையும், இனி வரக்கடவ பிராரத்த சேடத்தையும். முன்னைய தீரினும் பிராரத்த சேடம் நுகராதொழியாதாகவும் இங்ஙனங் கூறியது, யான் நுகர்கிறேன் என்ற இன்னலுமின்றிக் கழிக்கப்படுதலை. இதனால் பழவினை நீக்கமே இப்பதிகப் பயன் என்று உணர்த்தியவாறு. குருவருள்: வேதம் உலகினருக்கு வேண்டிய பொது அறங்கள் பலவற்றைச் சொல்வது ஆதலின், அதை இங்கு அருநெறிய மறை என்றும், ஆகமம் சத்திநிபாதர்க்குரிய சைவ நுட்பங்களைச் சொல்வது ஆதலின், அதனை இங்கு அவற்றின் மேம்பட்டது எனும் பொருளில் பெருநெறி என்றும் கூறினார். ஒருநெறி அல்லது ஒரு சமயம் என்றால் அஃது உலகினர் அனைவருக்கும் பயன்தரத் தக்கதாய் இருத்தல் வேண்டும். அதுபற்றியே ஞானசம்பந்தர் உலகினருக்கு அருநெறிப் பயனும் சத்திநிபாதர்க்கு பெருநெறிப்பயனும் உணர்த்தினார். ஆயினும் அருநெறியும் பெருநெறியும் ஒருநெறியே என்பதையும் அதுவே திருநெறி என்பதையும் உணர்த்தியருளினார். இக்கருத்தைத் திருமந்திரமும் திருநெறி யாவது சித்தசித் தன்றிப் பெருநெறி யாய பிரானை நினைந்து குருநெறி யாம்சிவ மாநெறி கூடும் ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே. என உணர்த்துவது காண்க. பீடுடைத்தேசிகன் செயல் திருநோக்கால் ஊழ்வினையைப் போக்குதல் எனவே தேசிகன் பேரருள் தொல்வினை தீர்த்தல் ஆயிற்று. `தோடு கூற்று பித்தா மூன்றும் பீடுடைத் தேசிகன் பேரருளாகும்` என்பது அபியுக்தர் வாக்கு. |
திருமுறை 2
திருப்பூந்தராய்பாடல் எண் : 1செந்நெ லங்கழ னிப்பழ னத்தய லேசெழும் புன்னை வெண்கிழி யிற்பவ ளம்புரை பூந்தராய் துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழ லீர்சொலீர் பின்னு செஞ்சடை யிற்பிறை பாம்புடன் வைத்ததே. பொழிப்புரை :செந்நெல் விளையும் அழகிய வயல்களை உடைய சோலைகளின் அயலிடங்களில் வளமையான புன்னை மரங்கள் உதிர்த்த பூக்கள், வெண்மையான துணியிற் பவளங்கள் பரப்பினாற் போல விளங்கும் திருப்பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், நல்ல தேவர்கள் நெருங்கிவந்து, தங்களின் முடிகளைத் தோய்த்து வணங்கும் திருவடிகளை உடைய இறைவரே! பின்னிய உமது செஞ்சடையில் இளம் பிறையை அதற்குப் பகையாகிய பாம்போடு வைத்துள்ளது ஏனோ? சொல்வீராக. குறிப்புரை :திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் இத்திருப்பதிகம் முதலாக நான்கு பதிகத்தில், சிவபெருமானை முன்னிலையிற் பெற்று, வினாவுதலும் விடை கூறியருள வேண்டுதலும் அமையப்பாடியிருத்தல்பற்றி, இவற்றை `வினாவுரை` என்றனர். இத்தலைப்புடைய பிற மூன்றும் காண்க. இதன் ஒவ்வொரு திருப்பாடலிலும் வெவ்வேறு பொருளைக் குறித்து வினாவினார். முதல் வினா இறைவன் திருமுடிச்சார்புடையது. ஈற்று வினா, திருவடிச்சார்புடையது. இடையிலே எருதேற்றம், மாதுபாகம். காமதகனம், கங்கையடக்கம், குழையும் தோடும் குலவும் முகம், இராவணனுக்கு அருளிய ஆக்கம் என்பவை வினாவிற்குரிய பொருளாயுள்ளன. மூன்றாம் அடிகளிலுள்ள விளிகளால் திருவடிப் பெருமையும், அமலமும் (யானையுரித்தவரலாறும்), விருப்பு வெறுப்பில்லாத வித்தகமும் (பிறையும் பாம்பும் சூடிய வரலாறும்), உயிர்களைத் தாங்கியுதவும் அருளுடைமையும் (மானேந்தியதால் விளங்கும் பசுபதித்துவமும்), திருவெண்ணீற்றுத் திருமேனிப் பொலிவும், மால்விடையூரும் மாட்சியும், மறை முதலாகும் இறைமையும், அடியாரைக்காக்கும் அடியும் (காரணமும்) குறிக்கப்பட்டன. இவ்வாறு பதிகந்தோறும் உய்த்துணர்ந்து போற்றிவரின், சிவபிரான் திருவருள் எளிதின் எய்தும். திருமுறையைப் பாராயணம் புரிவோர் அதனால் பெறும் பயன் அவரவர் அநுபவத்தால் அன்றி அறிய ஒண்ணாது. பாக்கள் வெளிப்படையாகத் தோன்றலாம். கருத்து அருள்வெளியைக் கவர்ந்தது, மருளுலகம் இவ்வுண்மையை உணராது. வேதத்தின் இயல்பே இதன் இயல்பு. முதற் பத்துத் திருப்பாடல்களுள்ளும் `சொலீர்` என்று விடையிறுத்தருள வேண்டுவதுணர்க. சடையில் பிறையும் பாம்பும் ஒருசேர வைத்ததற்குக் காரணம் சொல்ல வேண்டுகின்றார்; சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகக் கொள்ளும் ஐதிகத்தைக் கருத்திற் கொண்டு, பகைப்பொருள்கள் இரண்டும் ஓரிடத்தில் இருப்பது குற்றம் என்பார்க்கு, `வேண்டுதல் வேண்டாமை இல்லான்` ஆகிய சிவபிரான் சடையில், பகை நீங்கி உறவுகொள்ளும் நிலையை அவ்விரண்டும் அடைந்துள்ளன என்றார். பிறையைச் சூடிய வரலாறு, சிவாபராதம் புரிந்தாரும் அதனை உணர்ந்து அந்த இறைவனை வணங்குவராயின், அவர்க்குத் திருவருள் கிடைப்பது உறுதி என்னும் உண்மையை உணர்த்துவது. ஐந்தலைப் பாம்பணிந்தது,`பிறவி ஐவாய் அரவம் பொரும் பெருமான்` (திருவாசகம் 139) என்ற கருத்தினது. \\\\\\\"தூமதி சடைமிசைச் சூடுதல் தூநெறியா மதியான் என அமைத்தவாறே\\\\\\\" (பட்டினத்தார் ஒருபா ஒருபஃது 6.) `சோழவளநாடு சோறுடைத்து` இதிலுள்ள செந்நெல் அம் கழனிப்பழனம் உடைமை, சீகாழிக்கும் உரித்தாயிற்று. கிழி - துணி. கிழி (துணியும் அறுவையும்) காரணப்பெயர், புரை - ஒத்த. துன்னி-நெருங்கி. துன்னித்தோய்கழல் என்க. பழனத்தின் அயலிடங்களில் புன்னைப் பூக்கள் விழுந்துகிடக்கும் தோற்றம் வெள்ளைத் துணியில் பவளம் கிடக்கும் காட்சியை ஒத்திருந்தது என்க. `புன்னை பொன்தாது உதிர்மல்கும் அந்தண்புகலி` (தி.3.ப.7.பா.9) என்றதால் அதன் பூக்கள் செம்பவளம் போல்வன ஆதல் அறியப்படும். பாண்பு என்பது பாம்பு என்று திரிந்தது. பாண் - பாட்டு. பாட்டைக் கேட்கும் இயல்புடையது பாண்பு. இதில், பிறையும் பாம்பும் சடையில் ஒருங்கு வைத்தவாற்றை வினாவினார். பாடல் எண் : 2எற்று தெண்டிரை யேறிய சங்கினொ டிப்பிகள் பொற்றி கழ்கம லப்பழ னம்புகு பூந்தராய்ச் சுற்றி நல்லிமை யோர்தொழு பொற்கழ லீர்சொலீர் பெற்றம் ஏறுதல் பெற்றிமை யோபெரு மானிரே. பொழிப்புரை :எறிகின்ற தெளிந்த கடல் அலைகளில் ஏறிவந்த சங்குகளும் இப்பிகளும் பொன்போல் விளங்கும் தாமரைகள் மலர்ந்த வயல்களில் வந்து புகும் பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், நல்ல தேவர்கள் சூழ்ந்து தொழும் அழகிய திருவடிகளை உடைய இறைவரே! அயிராவணம் முதலிய ஊர்திகள் இருக்க விடையேறி வருதல் உமக்கு ஏற்ற தன்மைத் தாகுமோ? சொல்வீராக. குறிப்புரை :எற்று - எறிந்த. திரை - அலை. இப்பி - சங்கினத்துள் முதலாவது. இடம்புரியும் வலம்புரியும் சலஞ்சலமும் பாஞ்சசன்னியமும் ஆகிய சங்கினம் நான்கும் முறையே இப்பி முதல் சலஞ்சல முடியக்கூறும் நான்காலும் ஆயிரம் ஆயிரமாகச் சூழப்பெற்ற பெருமையின. (நிகண்டு, தொகுதி 3.பா.73) பெற்றம் - எருது. பெற்றிமை - தன்மை, பேறு, உயர்வுடையது. சிறந்த பாக்கியம் என்னுங்கருத்தில் வந்தது. பெருமகன் என்பது பெருமான் என்று மருவிற்று. மகன் - தேவன், (மகள்-தேவி, திருமகள், நாமகள்) பெருமானிர் - விளி, ஏகாரம் ஈற்றசை, சீகாழிக் கழனியிற் சங்கும் இப்பியும் பொன்போல் விளங்கும் தாமரைகளும் மிக்குள்ளன; பெற்றமேறுதல் - `பசு வேறும் பரமன்` விடையேறுதல்; பசுபதி என்பதைக் குறித்தது. இதில் விடை (பசு) ஏறும் உண்மையை வினாவினார். பாடல் எண் : 3சங்கு செம்பவ ளத்திரண் முத்தவை தாங்கொடு பொங்கு தெண்டிரை வந்தலைக் கும்புனற் பூந்தராய்த் துங்க மால்களிற் றின்னுரி போர்த்துகந் தீர்சொலீர் மங்கை பங்கமும் அங்கத்தொ டொன்றிய மாண்பதே. பொழிப்புரை :பொங்கி வரும் தெளிந்த கடல் அலைகள் சங்கு செம்பவளம் முத்து ஆகியவற்றைக் கொண்டு வந்து வீசும் நீர்வளம் சான்ற பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில் உயரிய பெரிய களிற்றுயானையை உரித்து அதன் தோலைப் போர்த்து மகிழ்ந்துறையும் இறைவரே! உமது திருமேனியின் இடப்பாகமாக உமையம்மையை ஓருடம்பில் ஒன்றுவித்துள்ள மாண்பு யாதோ? சொல்வீராக. குறிப்புரை :பொங்குதல் - உயர்தல், மிகுதல், புனல் - நீர், துங்கம் - உயர்ச்சி. பவளத்தின் அடைமொழியால் மற்றையிரண்டின் நிறம் வெளிப்படை, திரள் - திரட்சி; தொகுதியுமாம். களிறு - மதக்களிப்புடையது (யானையின் ஆண்). மால் - பெருமை, மயக்கமுமாம். உரி - தோல், உகந்தீர் - உயர்ந்தவரே, பங்கம் - கூறு. (பங்கு+அம்). அங்கம் - உறுப்பு, இங்குத் திருமேனியைக் கொள்க. ஒன்றிய மாண்பு - அர்த்தநாரீச்சுரவடிவின் சிறப்பு, யானையை உரித்தது ஆணவமல நாசம் என்பர், மங்கை பங்கு; போகியா யிருந்து உயிர்க்குப் போகத்தைப் புரிதல் பற்றியும் உயிர்க்கு இச்சாஞானக் கிரியா பலத்தை மிக விளைத்தல் பற்றியும் ஆயிற்று. ஆற்றலுக்கு அதுவே ஏது. களிற்றையுரித்த போது தேவியார் அஞ்சியதாகச் சொல்வது, ஞானமும் அஞ்சத் தக்க அத்துணைக் கொடியது இருண்மலம் என்பதுணர்த்த. இதில் மெய்ப்பாதியில் மாதிருக்கும் உண்மையை வினாவினார். பாடல் எண் : 4சேம வன்மதில் பொன்னணி மாளிகை சேணுயர் பூம ணங்கம ழும்பொழில் சூழ்தரு பூந்தராய்ச் சோம னும்மர வுந்தொடர் செஞ்சடை யீர்சொலீர் காமன் வெண்பொடி யாகக் கடைக்கண் சிவந்ததே. பொழிப்புரை :பாதுகாவலாக அமைந்த வலிய மதில்களும் பொன்னால் அழகுறுத்தப்பெற்ற அழகிய மாளிகைகளும், மிக உயர்ந்து மலர்மணம் கமழும் சோலைகளும் சூழ்ந்துள்ள பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், திங்களும் பாம்பும் தங்கிய செஞ்சடையுடையவராய் எழுந்தருளிய இறைவரே! உயிர்கட்குப் போகத்தின் மேல் அவாவினை விளைக்கும் மன்மதன் வெண்பொடியாகுமாறு அவனைக் கடைக்கண் சிவந்து அழித்தது ஏனோ? சொல்வீராக. குறிப்புரை :சேமம் - காவல், சேண் உயர்தல் - விண்ணில் மிக வோங்குதல், பொழில் - சோலை, சோமன் - பிறை, அரவு - பாம்பு, காமன் - மன்மதன். வெண்பொடி - (எரிந்த)சாம்பல். சிவத்தல் - கோபக்குறிப்பு, \\\\\\\"கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள\\\\\\\" (தொல், சொல், உரிச்சொல்.76) மன்மத தகனம், யோகியாய், யோகமுத்தி உதவுதற் பொருட்டு நிகழ்கின்ற இயற்கை. (சித்தியார்.70) இதில் காமனை எரித்தவாற்றை வினாவினார். பாடல் எண் : 5பள்ள மீனிரை தேர்ந்துழ லும்பகு வாயன புள்ளு நாடொறுஞ் சேர்பொழில் சூழ்தரு பூந்தராய்த் துள்ளு மான்மறி யேந்திய செங்கையி னீர்சொலீர் வெள்ள நீரொரு செஞ்சடை வைத்த வியப்பதே. பொழிப்புரை :நீர்ப் பள்ளங்களில் இருக்கும் மீன்களை இரையாகத் தேர்ந்து கொள்ளுதற்குத் திரியும் பிளந்த வாயை உடைய நாரைப் பறவைகள், நாள்தோறும், பல இடங்களிலிருந்தும் வந்து தங்கும் பொழில்கள் சூழ்ந்த பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், துள்ளுகின்ற மான் கன்றை ஏந்திய செங்கையை உடைய சிவபிரானே! பெருகி வந்த கங்கை வெள்ளத்தைச் சிவந்த சடையில் தடுத்து நிறுத்தித் தாங்கிய வியத்தகு செயலுக்குக் காரணம் யாதோ? சொல்வீராக. குறிப்புரை :நீர்ப் பள்ளங்களில் இருக்கும் மீன்களை இரையாகத் தேர்ந்து அலையும் நாரைகள் நாள்தொறும் சோலையில் தங்கும் வளமுடையது சீகாழி. நாரை பகுந்த (பிளந்த)வாய் உடைமையால் பகுவாயன புள்ளு என்றார். `வெண் குருகும் பகுவாயன நாரையும் திரைவாய் இரைதேரும் வலஞ்சுழி` (தி.2.ப.2.பா.2) என்றது காண்க. உணவும் இரையும் ஒன்றல்ல என்பதை \\\\\\\\\\\\\\\"இழிவறிந்துண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபேர் இரையான்கண் நோய்\\\\\\\\\\\\\\\" (குறள். 946) என்றதனால் அறிக. செஞ்சடைமேல் நீர்ப்பெருக்கை வைத்த வியப்பைச் சொல்வீர் என்று துள்ளுகின்ற மான்கன்றை ஏந்திய செங்கையையுடைய சிவபெருமானை நோக்கி வேண்டுகின்றார். காட்டில் இருக்கத்தக்க மானைக் கையிலும் கையில் இருக்கத்தக்க (கமண்டல) நீரைச் சடைக் காட்டிலும் ஏந்தியது வியப்பு. இதில் கங்கையைத் தாங்கிய ஆற்றலை வினாவினார். பாடல் எண் : 6மாதி லங்கிய மங்கைய ராட மருங்கெலாம் போதி லங்கம லம்மது வார்புனற் பூந்தராய்ச் சோதி யஞ்சுடர் மேனிவெண் ணீறணி வீர்சொலீர் காதி லங்குழை சங்கவெண் டோடுடன் வைத்ததே. பொழிப்புரை :அழகிய பெண்கள் ஆங்காங்கே நடனம் ஆடுவதும், ஊர் மருங்கெலாம் பூத்துள்ள அழகிய தாமரை மலர்கள் தம்மிடம் நிறைந்துள்ள தேனை ஒழுக விடுவதும் ஆகிய நீர்வளம் மிக்க பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், ஒளி மிக்க அழகிய தமது திருமேனியில் வெண்ணீறு அணிந்து எழுந்தருளிய இறைவரே! காதுகள் இரண்டனுள் ஒன்றில் குழையையும் ஒரு காதில் சங்கத்தோட்டையும் அணிதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக. குறிப்புரை :மாது - அழகு, இலங்குதல் - விளங்குதல், மருங்கு - பக்கம், போது - மலரும் பருவத்து அரும்பு, கமலம் - தாமரை, மது - கள், குழையும் தோடும் காதணிகள், சீகாழியில் அழகிய மங்கையர் ஆடுதற்குப் பரிசாகத் தாமரை, மலர்கள் தேனை ஒழுக்குகின்றன என்று நீர் நில வளம் உணர்த்தப்பட்டது. செம்மேனியில் வெண்ணீற்றை அணிவீர் என்று அழைத்து, திருக்காதில் குழையும் தோடும் உடன் வைத்த புதுமையை வினாவினார். `தோடுடையான் குழையுடையான்` (தி.1 ப.61 பா.8) `தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும் ..... உடைத்தொன்மைக் கோலம்` என்பது திருவாசகம் (232). பாடல் எண் : 7* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை. பொழிப்புரை :* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை. குறிப்புரை :* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை. பாடல் எண் : 8வருக்க மார்தரு வான்கடு வன்னொடு மந்திகள் தருக்கொள் சோலை தருங்கனி மாந்திய பூந்தராய்த் துரக்கு மால்விடை மேல்வரு வீர்அடி கேள்சொலீர் அரக்கன் ஆற்றல் அழித்தருளாக்கிய ஆக்கமே. பொழிப்புரை :இனங்களோடு கூடிய ஆண் குரங்குகள், பெண் குரங்குகளோடு கூடி, மரங்கள் நிறைந்துள்ள சோலைகள் தரும் கனிகளை வயிறார உண்டு மகிழும் பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில் எழுந்தருளியிருந்து, செலுத்தத்தக்க மாலாகிய இடபத்தின் மேல் காட்சிதரும் அடிகளே! இராவணனின் தருக்கினை அழித்து உடன் அவனுக்கு அருள் வழங்கிய ஆக்கத்திற்குக் காரணம் யாதோ? சொல்வீராக. குறிப்புரை :வருக்கம் - இனம், கடுவன் - ஆண் குரங்கு, மந்தி - பெண் குரங்கு, தரு - மரம், மாந்திய - தின்ற, துரக்கும் - துரத்தும். (பிறவினை) துரந்த, துரந்து எனல் தன்வினையாட்சி. அருகிய வழக்கு. வருவீராகிய அடிகேள் என்று விளித்து, இராவணனது ஆற்றலை அழித்து அருள்கொடுத்த ஆக்கத்தைப் பற்றி இதில் வினாவினார். பாடல் எண் : 9வரிகொள் செங்கயல் பாய்புனல் சூழ்ந்த மருங்கெலாம் புரிசை நீடுயர் மாடநி லாவிய பூந்தராய்ச் சுருதி பாடிய பாணியல் தூமொழி யீர்சொலீர் கரிய மால்அயன் நேடிஉ மைக்கண்டி லாமையே. பொழிப்புரை :மருங்கெலாம் வரிகளைக் கொண்டுள்ள செவ்விய கயல்மீன்கள் பாயும் நீர் நிலை சூழ்ந்ததும், மதில்கள் சூழ்ந்து நீண்டு உயர்ந்த மாடமாளிகைகள் விளங்குவதுமான பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், வேதங்களைப் பாடியும், இசைப் பாடல் போன்ற இனிய மொழிகளைப் பேசியும் எழுந்தருளிவிளங்கும் இறைவரே! கரிய திருமாலும் பிரமனும் உம்மைத் தேடிக் காண இயலாமைக்குரிய காரணம் யாதோ? சொல்வீராக. குறிப்புரை :சீகாழியில் உள்ள மாடமாளிகைகளின் உயர்வும் நீள்வும், புரிசையும், நீர்வளமும், அந்நீரிற் பாயும் மீன்களின் செழுமையும் குறிக்கப்பட்டன. வேதாகமங்கள் சிவபெருமான் திருவாக்காதலின், சுருதி பாடிய பாண் இயல் தூமொழியீர் என்று விளித்தார். இதில், அரியும் அயனும் அடிமுடி தேடிக் காணாமையை வினாவினார். பாடிய பாண் (பாட்டு) இயலும் மொழி. தூமொழி. சுருதி - கேள்வி, எழுதாக்கிளவியாதலின் கேள்வியால் தொன்று தொட்டுணர நின்றன. நேடி - தேடி. பாடல் எண் : 10வண்ட லங்கழ னிம்மடை வாளைகள் பாய்புனற் புண்ட ரீகம லர்ந்தும துத்தரு பூந்தராய்த் தொண்டர் வந்தடி போற்றிசெய் தொல்கழ லீர்சொலீர் குண்டர் சாக்கியர் கூறிய தாங்குறி யின்மையே. பொழிப்புரை :வளம்மிக்க வண்டல் மண்ணை உடைய வயல்களின் மடைகளில் வாளை மீன்கள் பாயும் நீர் நிலைகளில் தாமரைமலர்கள் மலர்ந்து தேனைத் தரும் பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், தொண்டர்கள் வந்து வணங்கும் கழல் அணிந்த பழமையான திருவடிகளை உடைய இறைவரே! சமணர்களும் சாக்கியர்களும் உம்மைக் கூறும் பொருளற்ற பழிமொழிகட்குக் காரணம் யாதோ? சொல்வீராக. குறிப்புரை :வண்டல் - வெள்ளத்தால் அடித்துக்கொண்டு வரப்பட்ட உரம்மிக்க மணல். மடை - நீர்மடை. புண்டரிகம் - தாமரை. தொல் கழல் - திருவடியின் தொன்மை. ஆதியும் மத்தியும் அந்தமும் இல்லாதது. கழல் என்பது எருதினது கொம்புபோல் அமைந்தது. பகைவர் உடம்பில் ஊறுபடுத்த, வலக்காலில் தரிக்கப்படுவது. \\\\\\\" தாள், களங்கொளக் கழல்ப றைந்தன கொலல் லேற்றின் மருப்புப் போன்றன\\\\\\\" (புறநானூறு.4.3-4) என்னும் அடிகளால் அறிக. தேய்ந்த பின் மழமழவென்றாகி எருதின் கொம்பையொத்தது. வடிவில் முழுதும் ஒப்பது. குண்டர் - சமணர். குறியின்மை - பிழையாதகுறி இல்லாமை. (தி.2 ப.82 பா. 10) இதில் புறப் புறச்சமயத்தார் செய்யும் நிந்தையின் பொருளின்மையை வினாவினார். பாடல் எண் : 11மகர வார்கடல் வந்தண வும்மணற் கானல்வாய்ப் புகலி ஞானசம் பந்தன்எ ழில்மிகு பூந்தராய்ப் பகவ னாரைப்ப ரவுசொன் மாலைபத் தும்வல்லார் அகல்வர் தீவினை நல்வினை யோடுட னாவரே. பொழிப்புரை :சுறா மீன்களை உடைய பெரிய கடல் நீர் வந்து சேரும் மணல் நிறைந்த கடற்கரைச் சோலைகளைக் கொண்டுள்ள புகலிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், அழகு மிக்க பூந்தராயில் எழுந்தருளிய இறைவரைப் பரவிப் பாடிய இப்பதிகப் பாடல் பத்தையும் ஓதவல்லவர் தீவினை அகல்வர். அவர்கள் நல்வினை உடையவர் ஆவர். குறிப்புரை :மகரம் - சுறாமீன், அணவும் - பொருந்தும். கானல் - கடற்கரைச் சோலை. புகலி - சீகாழி. எல்லாவுயிர்க்கும் புகலிடமானது. பகவனார் - திரு, ஞானம் முதலிய ஆறு குணங்களும் உடையவர். பரவுதல் - வாழ்த்தல். தீவினையை அகல்வர் - நல்வினையை அகலாது உடனாவார். ஓடு உடன் இரண்டும் இணைந்து வந்தவாறு அறியத்தக்கது. |
பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்
Subscribe to:
Comments (Atom)